.jpg)
மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட எரிவாயு கிணறுகள் தொடர்பாக மதிப்பீடு மற்றும் வர்த்தக ரீதியான கலந்துரையாடல்களை இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்டு வருவதாகவும் தற்போதைய அகழ்வு பணிகளின் கால எல்லையை 2014ஆம் ஏப்ரல் வரை இலங்கை அரசாங்கம் நீடித்துள்ளதாகவும் கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெய்ன் இந்தியாவின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மன்னாரில் எரிபொருள் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் கெய்ன் லங்கா நிறுவனம் இதுவரையில் நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வுகள் மேற்கொண்டதுடன் அதில் இரண்டு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயுவை கண்டெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் 20 பாரிய எரிபொருள் அகழ்வு நிறுவனங்களின் ஒன்றான கெய்ன் இந்தியா 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையில் தமது நிறுவனம் 749 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 14 வீத வளர்ச்சியாகும் என தெரிவித்துள்ள நிறுவனம் வரிக்கு பின்னரான நிகர இலாபமாக 545 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நிறுவனம் திறைசேரிக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமது நிறுவனம் நாளாந்தம் 213,299 பீப்பாய் எரிபொருள் உற்பத்தி செய்வதாகவும் இதனை வருட நிறைவுக்குள் 225,000 அதிகரிப்பதே நிறுவனத்தின் இலக்கு என கெய்ன் இந்தியாவின் பணிப்பாளர் இளங்கோ.பி தெரிவித்தார்.