
தேசிய மருந்து கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கமும் சுகாதார துறையினரும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக இலங்கை மருந்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம்; உறுதிபட மீண்டும் தெரிவித்துள்ளது.
நோயாளர்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்க தேசிய மருந்து கொள்கை இன்றியமையாதது என தெரிவித்துள்ள இலங்கை மருந்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனத்தின் தலைவர் ஸ்டுவர்ட் செப்மன், மஹிந்த சிந்தனைக்கு அமைய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு உதவுவதன் மூலம் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க முடியும் என கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'தரம் குறைந்த மருந்து பொருட்களை வழங்குபவர்களை முற்றாக அப்புறப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எமது சம்மேளனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். உள்ளுர் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியதே எமது சம்மேளனம். அரசாங்கத்தின் புதிய மருந்து கொள்கையின் பரிந்துரைகளை மதிப்பீடு செய்ய தயாராக உள்ளோம். தேசிய மருந்து கொள்கை மூலம் மக்களின் அபிலாஷைகள் மாத்திரமன்றி தரமான மருந்துகளை அரசாங்க துறையினரும் தனியார் துறையினரும் விநியோகிக்க வழிவகுக்கும். தேசிய மருந்து கொள்கையின் நகலை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முன்னர் அது தொடர்பில் கலந்துரையாட நாம் தயாராக இருக்கின்றோம்' என தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை மருத்துவ துறையில் பல்வேறு முக்கியமான தருணங்களை கடந்துள்ளது. இத்தகைய முக்கிய தருணங்களை வெற்றிகரமாக கடப்பதற்கு இலங்கை மருந்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனமும் உதவியுள்ளது. அரசாங்கம் இலவச மருத்துவ சேவையை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. மறுமுனையில் தனியார் துறையினரும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்;றனர். இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் எவ்வித கட்டணமுமின்றி அரச வைத்தியசாலைகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஏனையவர்களுக்கு தனியார் துறையில் தமது சேவைகளை பெற்றக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
அத்துடன் தரமான மருந்துகளை வழங்கவும், தட்டுப்பாடின்றி மருந்து விநியோகத்தை மேற்கொள்ளவும் இலங்கை மருத்துப்பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சம்மேளனத்தின் தலைவர் ஸ்டுவர்ட் செப்மன் சுட்டிக்காட்டினார்.