2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு கடந்த வாரம் இடம்பெற்றதை தொடர்ந்து, பொது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கி காணப்பட்டதாக பரவலாக தமிழ்மிரர் அறிந்து கொண்டது. கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் கடந்த வாரம் தொடர்ச்சியான சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. வியாழக்கிழமை நவம்பர் மாதத்தில் முதல் தடவையாக நேர் பெறுமதிகளை பங்குச்சந்தை பதிவு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,810.97 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3174.68 ஆகவும் அமைந்திருந்தன.
 
நவம்பர் 11ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,247,705,235 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 27,078 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 25,713 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,365 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
திங்கட்கிழமை
வாரத்தின் முதல் நாள் கொடுக்கல் வாங்கல்கள் மந்த கதியில் இடம்பெற்றிருந்ததுடன், வருடத்தில் பதிவாகிய இரண்டாவது ஆகக்குறைந்த மொத்தப்புரள்வு தொகை இன்றைய தினம் பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ பங்குகளின் மீதான வருமானம் பங்குச்சந்தை செயற்பாடுகளில் ஓரளவு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஆர்வம் காணப்பட்டது. எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது வெளிநாட்டவர்களின் ஈடுபாடு காணப்பட்ட போதிலும், சிறியளவிலான பங்குதாரர்கள் பெருமளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
 
செவ்வாய்க்கிழமை
பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் பெருமளவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சாதாரண பங்குகள் மற்றும் ஜோன் கீல்ஸ் பங்காணைப்பத்திரங்களில் தங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. மொத்தப்பங்குப்புரள்வின் 70மூ இவை பங்களிப்பு செய்திருந்தன. ஆனாலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய பங்குகளின் விலைச்சரிவுகளின் காரணமாக இரு சுட்டிகளும் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட் மற்றும் டோக்கியோ சீமெந்து பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது. டெஸ் அக்ரே, ட்ச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவு முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.
 
புதன்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சாதாரண பங்குகள் மற்றும் பங்காணைப்பத்திரங்கள் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு ஆதிக்கத்தை செலுத்தியிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி மத்திய அளவில் காணப்பட்டது. 700 மில்லியன் ரூபா பெறுமதியை கடந்து பதிவாகியிருந்தது. பிரதான சுட்டிகள் கலப்பு பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா IOC ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது. சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.   
 
வியாழக்கிழமை
நவம்பர் மாதத்தில் முதல் தடவையாக இரு சுட்டிகளும் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. நெஸ்லே லங்கா, டயலொக் ஆக்சியாடா மற்றும் சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகியன விலை உயர்வுகளை பதிவு செய்திருந்தன. இந்த பங்குகள் மீதான மொத்த வியாபாரங்கள் மொத்தப்புரள்வு பெறுமதி அரை பில்லியன் ரூபா பெறுமதியை கடந்து பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் லோஃவ்ஸ் பங்குகள் மீது கலந்த ஈடுபாடு காணப்பட்டதுடன், E -செனலிங் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவான முதலீட்டாளர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
வெள்ளிக்கிழமை
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு கோலாகலமாக ஆரம்பமாகிய போதிலும், பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் மந்த கதியில் இடம்பெற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. மொத்தப்புரள்வு பெறுமதி 234 மில்லியன் ரூபா எனும் குறைந்த பெறுமதியிலேயே காணப்பட்டது. நெஸ்லே லங்கா மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகளின் விலைச்சரிவுகள், சுட்டிகளை மறைபெறுமதியில் பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தன. இதேவேளை சம்பத் வங்கி பங்குகள் மீது கலந்த ஈடுபாடு காணப்பட்டதுடன், நேஷன் லங்கா ஃபினான்ஸ், PCH ஹோல்டிங்ஸ் மற்றும் பான்ஏசியன் பவர் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அதிகம் காணப்பட்டது. 
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் எஸ்எம்பி லீசிங்(சாதாரண), சம்சன் இன்டர்நஷனல், த்ரீ ஏக்கர் ஃபார்ம்ஸ், ஆசிரி சென்ரல் மற்றும் எஸ்எம்பி லீசிங் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
லங்கா சென்ச்சரி (உரிமை), மஸ்கெலிய, லங்கா சென்ச்சரி (உரிமை), மடுல்சீமை மற்றும் மிரமர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,300 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.73 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 213.91 ஆக காணப்பட்டிருந்தது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .