2026 மே 02, சனிக்கிழமை

செலான் வங்கியின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு இரு சர்வதேச விருதுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின், மும்பாய் நகரில் அண்மையில் இடம்பெற்ற இரண்டாவது 'ஆசிய வாடிக்கையாளர் ஈடுபாடு விருதுகள்' (Asian Customer Engagement Awards) நிகழ்வின் போது செலான் வங்கியானது தனது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 'புத்தாக்கம்' மற்றும் 'மேம்படுத்தல்' ஆகிய உப-பிரிவுகளின் கீழ் இரு உயர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

'Seylan Tikiri Gift Rush – Game App Launch' முன்னெடுப்பானது 'புத்தாக்க' பிரிவின் கீழ் விருது ஒன்றை பெற்றுக் கொண்ட அதேநேரம், 'The Big Seylan Quiz on Facebook' நடவடிக்கையானது 'மேம்படுத்தல்' பிரிவின் கீழ் விருதொன்றை பெற்றுக் கொண்டது. அதன்மூலம் இந்த மதிப்புமிக்க விருது வழங்கல் நிகழ்வில் ஒன்றல்ல, இரு விருதுகளை வெற்றிகொண்ட இலங்கையின் ஒரேயொரு வங்கி என்ற சாதனையையும் தென்னாசியாவின் ஒரேயொரு வங்கி எனும் சாதனையையும் செலான் வங்கி நிலைநாட்டியுள்ளது.

செலான் வங்கியின் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) ரிலான் விஜயசேகர இவ் இரு விருதுகளையும் வெற்றி கொண்டமை தொடர்பான தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், 'மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் மற்றும் சமகால சந்தைப்படுத்தல் போக்குகளுக்கு ஒத்திசைவாக செலான் வங்கி தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. டிஜிட்டல் (எண்மிய) மற்றும் சமூக ஊடக சந்தைப்படுத்தல் என்பன அதற்கு சிறந்த உதாரணமாகும். இவை இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றினூடான சந்தைப்படுத்தல் முன்னெடுப்புக்களின் மூலம், பிரத்தியேகமான வாடிக்கையாளர் பிரிவினரை தம்வசப்படுத்துவதற்கான மற்றும் தக்க வைத்திருப்பதற்கான முன்முயற்சிகளில் செலான் வங்கி ஈடுபட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிச் செயற்படும் நாம் நவீனகால புதிய ஊடக வழிமுறைகளை பயன்படுத்தும் முன்னோடிகளுள் ஒன்றாக திகழ்கின்றோம். எமது வாடிக்கையாளர்களை அணுகுவதற்காக நாம் இணைய வங்கியியல், SMS வங்கியியல், மும்மொழிகளிலுமான எமது இணையத்தளம் (www.eseylan.com) போன்ற இணையத்தள மற்றும் டிஜிட்டல் பிரயோக முறைமைகளையும் அதேபோல் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக வழிமுறைகளையும் நாம் ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அதேவேளை வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்கும் முகமாக எமது வாடிக்கையாளர் சேவை மையங்களை அதிகரித்து வருவதுடன், வர்த்தக குறியீட்டின் மீதான விசுவாசத்தை மேலும் கட்டியெழுப்பும் நோக்கில் எமது வாடிக்கையாளர்களுக்கு 'பெறுமதி சேர்த்தலையும்' மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 'அதேநேரம் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் எம்முடன் இடைத்தொடர்பாடலை மேற்கொண்ட சமூக ஊடகங்களின் ரசிகர்கள், எமது வங்கி ஊழியர்கள் மற்றும் எமது சமூக ஊடக முகவர் நிறுவனமாக திகழும் 'லூப்ஸ் சொலியுசன்ஸ்' ஆகியவற்றுக்கு இவ்வேளையில் நாம் நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம்' என்று கூறினார்.

செலான் வங்கியின் பொறுப்புடைமை உற்பத்திகள் முகாமைத்துவ பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் டினேஸ் ஜெபமணி கூறுகையில், 'எமது முன்முயற்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை காணக் கிடைக்கின்ற இச் சந்தர்ப்பம் செலான் வங்கியில் உள்ள பணிக் குழுவினருக்கு மிகவும் ஊக்கமளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. வணிகத்தில் இருந்து - வாடிக்கையாளர்களுக்கு மற்றும் வணிகத்தில் இருந்து - வணிகத்திற்கு என்ற அடிப்படைகளில், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு செலான் வங்கி எல்லா வேளைகளிலும் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கி வருகின்றது. டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் செயற்றிறன்மிக்க உபாயங்களை விருத்தி செய்து புதிய போக்குகளை கற்றறிந்து கொள்வதில் முனைப்புடன் இருக்கும் அதேநேரத்தில் வெளியக விற்பனையாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதிலும்; கவனம் செலுத்தும் உயர் திறனுள்ள மற்றும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களின் பக்கபலத்தை செலான் வங்கி கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.

'Seylan Tikiri Gift Rush' என்பது விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு விளையாட்டு பிரயோக மென்பொருள் (Game App) ஆகும். ஒரு கணணி, ஒரு அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன் உபகரணம் அல்லது பேஸ்புக்கில் இதனை விளையாட முடியும். கடந்த ஒக்டோபர் மாதத்தில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் தற்செயலாக இந்த பிரயோக மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், இலங்கையின் வங்கியியல் துறையில் சிறார் கணக்குகள் பிரிவிற்காக இவ்வகையான ஒரு விளையாட்டு பிரயோக மென்பொருளை முதன்முதலாக அறிமுகப்படுத்திய வங்கி என்ற சிறப்பை செலான் வங்கி பெற்றுக் கொள்கின்றது. விளையாட்டின் ஒவ்வொரு கட்டமும் முடிவடைகின்ற வேளையில், டிக்கிரி சேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்தால் சிறுவர்கள் நிஜமான பரிசுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் இவ் விளையாட்டு வடிவமைக்கப்பட்டது. அனுமான ரீதியான அமைப்பாக்கம் (Hypothetical setting) ஒன்றின் மூலம் இது மிக இலகுவானதொரு 'ஒன்லைன்' விளையாட்டாகவும் அமைந்திருந்தது. அதுமட்டுமன்றி, சிறுவர்கள் சேமிப்பதற்கும் நிஜமாகவே இந்த அன்பளிப்பை பெற்றுக் கொள்வதற்கும் சிறுவர்களுக்கு இது ஊக்கமளிப்பதாக காணப்பட்டது.

The BIG Seylan Quiz on Facebook என்பது செலான் வங்கியின் பேஸ்புக் பக்கத்தின் ரசிகர்களுக்கான ஒரு திறந்த விளையாட்டாகும். ஓன்லைன் வடிவ கேள்விக் கொத்தாக இது காணப்பட்டதுடன், அதிலுள்ள பல்தேர்வு ஐந்து வினாக்களுக்கு ரசிகர்கள் 15 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டியிருந்தது. வாடிக்கையாளர் ஈடுபாட்டின் சிறந்ததொரு செயல்தொடர்பை உருவாக்கும் நோக்கில், செலான் வங்கியின் பல்வகைப்பட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளுடன் தொடர்புபட்டதாக இக் கேள்விகள் காணப்பட்டன. இவ் வெகுமதிகளை வெற்றி கொள்ளும் பொருட்டு கேள்விகளுக்கான விடைகளை தேடியறிந்து கொள்வதற்காக எமது இணையத்தளம் மற்றும் கிளைகளுக்கு விஜயம் செய்வதற்கும், அதேபோன்று துரித அழைப்பு மையங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளவும் வாடிக்கையாளர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். அனைத்து ஐந்து வினாக்களுக்கும் சரியாக விடையளித்த ரசிகர்கள் அனைவரும் வாராந்த சீட்டிழுப்பில் சேர்க்கப்பட்டதுடன், அதிலிருந்து ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 நவம்பர் மாதத்தின் நான்கு வாரங்களில் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு செலான் வங்கி தலா ரூபா 25,000 பணப் பரிசை வழங்கியது.

இறுதியான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக இப்போது இரண்;டாவது வருடமாக 'வாடிக்கையாளர் ஈடுபாட்டு ஒன்றுகூடல்' மற்றும் முதன்முதலாக 'விருது வழங்கல் நிகழ்வும்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய போட்டிகரமான சந்தையில் நிறுவனங்களின் போட்டிகளுக்கு புறம்பாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கம்பனிகளை இது உருவாக்கும். முன்னிலை நிறுவனங்கள் என்ற அடிப்படைகளுக்கு பதிலாக – சந்தையில் தம்மை நிலைநிறுத்துவதற்கு தேவையான வாடிக்கையாளர் கருத்துக்கள், ஈடுபாடு, விசுவாசம் மற்றும் தக்கவைத்திருத்தல் நுட்பங்களுடன் எப்போதும் நிலைத்திருக்க இது வழிவகுக்கும்.

புகைப்பட விளக்கம்: இந்தியா, மும்பாய் ஐ.ரி.சி. கிரேண்ட் சென்ரல் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற இரண்டாவது 'ஆசிய வாடிக்கையாளர் ஈடுபாடு விருதுகள்' நிகழ்வின் போது, DDB முத்ரா (இந்தியா) நிறுவனத்தின் குழும பணிப்பாளர் (வர்த்தக குறியீட்டு தொடர்பாடல்கள்) அவினாஸ் ஒசா அவர்களிடமிருந்து செலான் வங்கியின் பொறுப்புடைமை உற்பத்திகள் முகாமைத்துவ பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் டினேஸ் ஜெபமணி விருதுகளை பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .