
நாடு முழுவதும் 17 விற்பனையகங்களை கொண்டுள்ள நாட்டின் முன்னணி ஆடை விற்பனையக தொடரான ஃபஷன் பக், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவியிருந்தது.
இதற்கமைவாக மத்துகமை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய நகரமான பெலெந்த பகுதியைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. ஃபஷன் பக் பணிப்பாளர் ஷபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில், 'இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டாயம் உதவி தேவைப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இந்த கஷ்டம் நிறைந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவினால் நல்லது' என்றார்.
'இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். ஏனைய தனியார் நிறுவனங்களையும் இதுபோன்ற செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு நாம் ஊக்குவிக்கிறோம். இந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக தமது நாளாந்த செயற்பாடுகளை கூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.
நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், வெள்ள அனர்த்தம், மணல் திட்டுக்கள் சரிவின் காரணமாக சுமார் 115,000 மக்கள் வரை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 23 பேர் வரை கொல்லப்பட்டிருந்ததாகவும், 30,000 பேர் வரை தமது வீடுகளை விட்டு புலம்பெயர், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் சமூக நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.
தமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் ஓரங்கமாக, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 250 குடும்பங்களுக்கு உலர்ந்த உணவுப் பொருட்கள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றை விநியோகித்திருந்தது. இதற்கான வழிகாட்டலை பெலெந்த ரஜ மஹா விஹாரையின் மஹாநாயக்க தேரர் வழங்கியிருந்தார்.
விஹாரையின் பிரதம குரு கருத்து தெரிவிக்கையில், 'ஃபஷன் பக் நிறுவனம் முன்வந்து இந்த அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியிருந்தமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், அவர்களுக்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
1994 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை பங்காண்மை வர்த்தகமாக 4 பங்காளர்களுடன் இணைந்து ஃபஷன் பக் ஆரம்பித்திருந்தது. அக்காலகட்டத்தில் 15 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றியிருந்தனர். தற்போது நாடு முழுவதும் 17 விற்பனையகங்களை கொண்டுள்ளதுடன், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1200 ஐ கடந்துள்ளது. இலங்கையின் முன்னணி ஆடையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.