
பொருளாதார விவகார அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களின் மேன்மைக்குரிய ஆதரவு மற்றும் ஆடையுற்பத்தி துறையில் செயற்படும் முக்கிய நிறுவன பிரதிகளின் பங்குபற்றுதல் என்பவற்றுடன் இலங்கை ஆடை குறியீடுகள் ஒன்றியம் (SLABA) இன்று கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு தைத்த ஆடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் என்று முன்னர் அறியப்பட்ட SLABA இன் முக்கிய இலக்குகளில் ஒன்றாக - இலங்கையின் ஆடை வர்த்தக குறியீடுகளின் கேந்திர மையமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்தல் என்பது காணப்படுகின்றது. இந்த இலக்கை அடையும் வகையில், JAAF (இணைந்த ஆடை ஒன்றிய மன்றம்) அமைப்பின் அங்கத்துவத்தை இது பெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வை கொண்டாடும் முகமாக, மேற்படி ஒன்றியத்தின் www.srilankabrands.com என்ற இணையத்தளம் கௌரவ அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
'இலங்கையின் சில்லறை ஆடைச் சந்தையானது 2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இச் சந்தையின் 40 வீதமான பங்கிற்கு இலங்கையின் வர்த்தக குறியீடுகளே பங்களிப்புச் செய்கின்றன. எனவேதான், எம்மளவில் நாம் மீள வர்த்தகக் குறியீடு செய்து கொள்ள இது சரியான சந்தர்ப்பம் என்று நாம் உணர்ந்து கொண்டோம். வாடிக்கையாளர்களுக்காக வர்த்தக குறியீடு பொறிக்கப்பட்ட தரமிக்க உற்பத்திகள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கின்ற ஒரு ஒன்றியமாக இத்துறையிலும் சந்தையிலும் நாம் நிலைபெற்று வருகின்ற வேளையில் மேலும் சிறந்த அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நாம் மீள வர்த்தகக் குறியீடு இட்டிருக்கின்றோம்' என்று SLABA இன் புதிய தலைவர் இந்திரதத்த தர்மவர்தன தெரிவித்தார்.
அதிகரித்துச் செல்லும் விதத்திலான 60 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், இத்துறையின் நிலைபேறான வளர்ச்சி மற்றும் இலங்கையின் தைத்த ஆடைத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொண்டு விடாமுயற்சியுடன் பணியாற்றுகின்றமையானது – பல்வேறு பங்குதாரர்களின் அபரிமிதமான அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் பேரார்வம் போன்றவற்றை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இந்த அர்ப்பணிப்புமிக்க மற்றும் பேரார்வமுள்ள தனிநபர்கள் பலரை பெறுமதிமிக்க உறுப்பினர்களாக கொண்டு செயற்படுவது குறித்து SLABA மகிழ்ச்சியடைகின்றது' என்று தர்மவர்தன மேலும் குறிப்பிட்டார்.
ஆடை உற்பத்தியாளர்கள், துணைப் பொருட்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்கள், ஆதரவுச் சேவைகள், கொள்வனவு அலுவலகங்கள் மற்றும் கொள்வனவாளரின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையிலுள்ள ஆடைத் துறை தொடர்பான ஏனைய துணை நிறுவனங்கள் போன்ற தரப்பினரை உள்ளடக்கிய தொழில் துறைசார் கம்பனிகளை இலங்கையின் ஆடைத் துறையானது பிரதிநிதித்துவம் செய்கின்றது. தமது விநியோக வழிமுறையை பூர்த்தி செய்வதற்கு அவசியமாகவுள்ள, முழுமையான பின்-ஒருங்கிணைப்பைக் கொண்ட உயர்ரக நெறிமுறை அடிப்படையிலான தீர்வுகளை எதிர்பாhத்திருக்கும் கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இவ்வாறான ஒன்றிணைந்த குரலும் கூட்டிணைந்த முயற்சியும் பிரத்தியேகமான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றன.
SLABA இன் நோக்கங்களும் இலக்குகளும் பல்வேறு பயன்களைக் கொண்டதாகும். இத் துறைக்குள் புதிதாக நுழைபவர்களிடையே ஆடை வர்த்தக குறியீடுகள் பிரிவை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு வசதியளிப்பாளராக செயற்படுகின்ற அதேவேளை, இலங்கையின் வர்த்தக குறியீடுகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் அவற்றை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக குறியீடுகளாக கட்டியெழுப்புவதையும் இவ் அமைப்பு நோக்காக கொண்டுள்ளது.
கசுவல் ஆடைகள், தைக்கப்பட்ட மற்றும் சம்பிரதாய ஆடைகள், பெஷன் ஆடைகள், சீருடைகள் மற்றும் வேலைத்தள ஆடைகள், உள்ளாடைகள் மற்றும் காலணிகள், தலைக்கு அணிபவை, பைகள் என பல்வகைப்பட்ட வர்த்தகக் குறியீடு இடப்பட்ட உற்பத்தித் தொடர்களுக்கான பொதுவானதொரு களத்தை இது வழங்குகின்றது.
சுகாதாரம், தற்காப்பு, தொழிற்பாடு மற்றும் சூழல் ஆகிய விடயங்கள் தொடர்பிலான துறைசார் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள SLABA அமைப்பு, இலங்கையில் வர்த்தக குறியீட்டைக் கொண்டுள்ள ஆடைத் துறையின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு தன்னார்வ, சட்டத்திற்கு உட்படாத பிணைப்புச் சட்டகம் ஒன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பதிலீட்டு உற்பத்திகளுடன் போட்டியிடும் அளவுக்கு இத் துறையிலுள்ள நிறுவனங்களுக்கு சக்தியளிக்கின்ற இவ் அமைப்பானது, இத் துறை பற்றிய நற்பெயரை கட்டியெழுப்புவதற்கும் முனைப்புடன் உள்ளது. 'இது நீண்ட, துணிகரமான பயணமொன்றின் ஆரம்பமாகும். சர்வதேச ஆடை உற்பத்தித் துறையின் கேந்திர மையமாக இலங்கையை மாற்றியமைக்கின்ற அதேநேரத்தில், உள்நாட்டு ஆடைத்துறையை 3 பில்லியன் டொலர் பெறுமதி கொண்டதாக வளர்ச்சியடையச் செய்யும் விடயத்தில் SLABA கட்டாய கவனம் செலுத்தியிருக்கின்றது' என்று தர்மவர்தன சுட்டிக்காட்டினார்.
(தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சீனாவில் உள்ளதைப் போன்று) உல்லாசப் பயணிகள் மற்றும் வர்த்தக நோக்கிலான பயணிகள் தொடர்பான அனைத்து விதமான தேவைகளையும் நிவர்த்திக்கும் வகையில் சர்வதேச சந்தை மையங்களை அறிமுகம் செய்வதன் ஊடாக சந்தை வாய்ப்புக்களை மேலும் விஸ்தரிப்பதற்கு இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு ஆடைச் சந்தையில் தாக்கம் செலுத்துகின்ற கொள்கைகளை சீரமைக்கும் பணிகளிலும் SLABA ஈடுபடும். அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆதரவை நாடுவதன் ஊடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படும்.
உள்நாட்டுச் சந்தையின் தேவைகளை நிவர்த்திக்கக் கூடியவையாக வர்த்தக குறியீடுகளை அபிவிருத்தி செய்வதற்கு SLABA ஊக்கமளிக்கின்ற அதேவேளை, வர்த்தக குறியீடு இடப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் அலகுகள் தொடர்பிலும் தொடர்ச்சியாக கணிப்பீடுகள் மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளும். அதுமாத்திரமன்றி, அவ்வாறான உற்பத்தியாளர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்யப்பட்ட பங்களிப்பை எடுத்துரைப்பதன் மூலம் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை இதன் பக்கம் திருப்புவதற்கும் இவ்வமைப்பு எதிர்பார்க்கின்றது.