செலான் வங்கியானது இலங்கையின் முதலாவது 'பல்-நாணய பயணிகள் அட்டையை' (multi-currency Travel Card) 2014 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளமையால், சர்வதேச பயண அனுபவமானது இப்போது புதிய பரிமாணத்திலான அணுகல்வசதி, பயன்பாடு; மற்றும் பாதுகாப்பு தன்மை போன்றவற்றை கொண்டதாக மீள் வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க டொலர், ஸ்ரேலிங் பவுண்ட், யூரோ, சவூதி அரேபிய றியால் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் போன்ற பல்-நாணய அலகுகளை உள்ளடக்கியதாக விநியோகிக்கப்படுவதுடன் 'மைக்ரோ சிப்' உள்ளடங்கியுள்ள செலான் பயணிகள் அட்டையானது – உலகின் எந்தவொரு பாகத்தில் இருந்தவாறும் மேற்குறிப்பிட்ட ஐந்து நாணய அலகுகளிலும் பயன்படுத்துனர்கள் ஏககாலத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய மிகவுயர்ந்த சௌகரியத்தை அளிக்கின்றது. எந்த நாணய அலகை பயன்படுத்தவுள்ளார் என்பது தொடர்பில் வாடிக்கையாளர் வங்கிக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக தமக்கு விருப்பமுடைய எந்தவொரு நாணய அலகிற்காக உலகின் எப்பாகத்திலும் இந்த அட்டையை இலகுவான முறையில் பயன்படுத்த முடியும் என்பதால் இது சிரமமற்றதுமாகும். இவ் அட்டையானது குறித்த நபர் சென்றடைகின்ற நாட்டின் நாணய அலகு போன்று இலகுவாக மாறிக் கொள்ளும் (பரிவர்த்தனையாகும்) சிறப்பியல்பை கொண்டது. இதனால், வாடிக்கையாளர்கள் நாணய மாற்றுக்காக கட்டணங்களை செலவிடுவது தவிர்க்கப்படுகின்றது.
முற்கொடுப்பனவு அடிப்படையிலான வீசா அங்கீகாரம் பெற்ற ஒரு அட்டையான இது உடனுக்குடன் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படும் வசதியை உங்களுக்காக தன்னுடன் கொண்டு வருகின்றது. அதுமட்டுமன்றி, வீசா அங்கீகாரம் பெற்ற 2.2 மில்லியன் ATM நிலையங்களில்; இலவசமாக பணத்தை மீளப் பெறக்கூடிய மிகவுன்னத சௌகரியம் மற்றும் உலகெங்குமுள்ள 30 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதி போன்றவற்றையும் இவ் அட்டை அளிக்கின்றது. இதற்கு மேலதிகமான அனுகூலமாக திகழும் தவறற்ற ஒன்லைன் பரிவர்த்தனை வசதியானது பொருட் கொள்வனவுசார் உலகத்தையே பாவனையாளருக்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.
'சிரமங்களின்றி பயணம் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொண்டுள்ள அதேநேரம் மன அழுத்தம் மற்றும் கவலை இல்லாத பயண அனுபவம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் என்று நாம் நம்புகின்றோம். அந்த வகையில், வெளிநாட்டு நாணயங்களை பாதுகாப்பான முறையில் அணுகிப் பயன்படுத்தும் விதத்திலமைந்த சிரமமற்றதும் சௌகரியமானதுமான மிகச் சிறந்த பயணத்தை இலங்கையருக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு வழிவகுக்கும் இத்தீர்வை வழங்குவதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம். அந்தப் பணியைச் செய்வதற்காகவே செலான் பயணிகள் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு அட்டையில் 5 நாணய தெரிவுகளை உள்ளடக்கியதன் மூலம் இது பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உலகின் எந்தவொரு பாகத்தில் இருந்தவாறும் இதனது பயன்படுத்துனர்கள் ஒரேநேரத்தில் ஐந்து விதமான நாணயங்களில் தம்முடைய வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சௌகரியத்தையும் அளிக்கின்றது' என்று செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில ஆரியரத்ன தெரிவித்தார்.
செலான் பயணிகள் அட்டையானது ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற பின்னரும் குறுந்தகவல் எச்சரிக்கை அறிவிப்பை (SMS Alerts) அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு அனுகூலங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, அடையாள குறியீட்டு (PIN) இலக்கத்தால் பாதுகாப்பளிக்கப்பட்ட முறைமையின் மூலம் இணையத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி மீதி தொடர்பான விபரங்களையும் அறிந்து கொள்ள முடிவதுடன், கொடுக்கல் வாங்கல்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இலவச மருத்துவ காப்புறுதியையும் இது வழங்குகின்றது. இந்த அட்டையானது தன்னளவில் பெருமளவான அனுகூலங்களை கொண்டிருப்பதால், கூட்டாண்மை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அவ்வாறான நிறுவனங்களைச் சேர்ந்த தொடர்ச்சியாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்ற ஊழியர்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வோர் புதிய புதிய அட்டைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் சிரமமின்றியும், மேலதிக நாணயமாற்று செலவின்றியும் இவ் அட்டையை பயன்படுத்தலாம். அதுமாத்திரமன்றி, கூட்டாண்மை நிறுவனங்கள் செலவை கண்காணிப்பதற்கும் மேலும் பல அனுகூலங்களை பெறுவதற்கும் இது இடமளிக்கின்றது.
தனிநபர் வங்கியியல் பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் திஸ்ஸ நாணயக்கார கூறுகையில், 'ஒருவர் தனது கையில் இருக்கின்ற பணத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதைக் குறைத்து தன்னுடைய பயணத்தின் நோக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் மிகவுன்னத சௌகரியத்தை செலான் பயணிகள் அட்டை உறுதிப்படுத்துகின்றது. 'பல்-நாணய' வசதியானது இந்த அட்டைப் பாவனையை ஐந்து மடங்கு சௌகரியமானதாக மாற்றுகின்றது. இதன்மூலம் ஒருவரது பயண அனுபவத்தை முழுமையான சௌகரியம் மற்றும் அமைதியான மனநிலை என்பவற்றை கொண்டதாக மேம்பாடடையச் செய்கின்றது. இந்த அட்டையை பயன்படுத்துவதன் மூலம், ஈடிணையற்ற அனுகூலங்கள் மற்றும் சௌகரியத்தை பெறக்கூடிய பயணிகள் வலைப்பின்னல் ஒன்றின் அங்கமாக திகழ்வதற்கான வாய்ப்பு குறித்த நபருக்கு கிடைக்கின்றது. உண்மையிலேயே பல்லாயிரக்கணக்கான எமது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து இலங்கையர்களுக்குமே இந்த பயணிகள் அட்டையை வழங்குவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.
ஒரு முறை கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு விட்டால் இவ் அட்டையானது நாணய தளம்பல்கள் தொடர்பான தாக்கங்களை குறைத்துக் கொள்ளும். 'முதன்மையான பயணிகள் அட்டை' தொலைந்து போனால் அல்லது களவாடப்பட்டு விட்டால் அவ்வேளையில் பயன்படுத்துவதற்கென ஒரு 'மேலதிக அட்டையை' பெறக்கூடிய வசதியும் மேலதிகமாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. அதன்மூலம் இப் புதுமையான அட்டையின் பாதுகாப்புசார் சிறப்பம்சங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செலான் பயணிகள் அட்டையை உபயோகித்து பணத்தை மீளப் பெறுகின்ற போது அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்கின்ற போது தரகுக் கட்டணம் அறவிடப்படாது என்பதுடன், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் இல்லை.
'செலான் பயணிகள் அட்டையானது ஒவ்வொரு இலங்கையரதும் விருப்பத்திற்குரிய பயண வழித்துணையாகவும் அதேபோல் ஒருவரது கடவுச் சீட்டுடன் சேர்த்து கையில் கொண்டு செல்லப்படுவதாகவும் மிக விரைவாக வளர்ச்சி கண்டுள்ளதை நாம் காண்கின்றோம். இந்த முன்மாதிரி முன்னெடுப்பை மேற்கொள்வதன் மூலம், வெளிநாட்டுப் பயணத்தை மேலும் சௌகரியமானதாகவும் மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்றியமைப்பதையிட்டு செலான் வங்கி பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றது' என்று திரு. நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.