
பெலாரஸ் குடியரசிற்கும் இலங்கைக்குமிடையே இருதரப்பு வர்த்தக உறவுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது இலங்கை- பெலாரஸ் கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கான சந்திப்பு நாளை புதன்கிழமை, கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இரு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள (9-10 ஜூலை) இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பெலாரஸ் குடியரசின் வெளியுறவு பிரதி அமைச்சர் வாலண்டின் பி.ரைபெக்கொவ் மற்றும் யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
மேலும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வர்த்தக சந்திப்பில், பெலாரஸ் அரசின் வலுவான உத்தியோகபூர்வ 20 அங்கத்துவ பிரதிநிதிக்குழுவினரும் பங்கேற்பர்.
இலங்கையுடனான இப்புதிய வர்த்தக முயற்சிகள் வரலாற்று உறவுகளினை பலப்படுத்தும், மேலும் முக்கியமாக, உலகின் புதிய ஒற்றை பொருளாதார சந்தையில் நேரடியாக இலங்கைக்கு அணுகுவதற்கு வழிவகுக்கின்றது. தற்போது பெலாரஸ் குடியரசு இலங்கையுடனான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தனது ஆர்வத்தினை முழுமையாக காட்டிவருகிறது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 25-27ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெலாரஸ் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அந்நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்ஷேன் கோவையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கைக்கும் பெலாரஸுக்கும் இடையே ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை, குற்றவியல் தொடர்பான விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான சீட்டுடையவர்களுக்கு விசாக்களிலிருந்து விடுவித்தல், இதேவேளை இருநாடுகளுக்கும் இடையேயான இரட்டை வரி விதிப்பை தடுக்கும் உடன்படிக்கை, சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை மற்றும் இராணுவத்துறையில் தொழில் நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன் படிக்கைகள் போன்றன கைச்சாத்தாகின.
பெலாரஸ் குடியரசிற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி தேயிலையாகு. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2012ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அத்துடன் அதே ஆண்டில் பெலாரஸிற்கான மொத்த ஏற்றுமதி 94சத வீதமாகும்.