.JPG)
மருந்தக விற்பனையாளர்களில் நூற்றுக்கு 99 வீதமானோர் தமது வர்த்தக செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் அதனை மேலும் மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனத்தின் (SLCPI) வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு சிறந்த சுகாதாரச் சேவையொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அரச கொள்கைகளுக்கு அமைய அரச மற்றும் தனியார் பிரிவுகளில் அனுகூலமான போட்டித் தன்மையொன்றை ஏற்படுத்தி அதனூடாக அந்த பிரிவுகளை மேம்படுத்துவது மட்டுமன்றி மருந்துப் பொருள் வர்த்தகர்களை பலப்படுத்துவதே அரசின் நோக்கமாகும். அத்துடன் அரசாங்கம் என்ற ரீதியில் விசேடமாக மருந்தக தொழில்சார் துறையினரை மேம்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்தகக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், இணையத்தளத்தில்
சேர்க்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட தேசிய மருந்தக சட்டமூலம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்ட போதிலும் அதில் பெரும்பாலானவை அரசியல் நோக்கமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே எனத் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனம் திருத்தப்பட்ட சட்டமூலத்தின் பிரதியொன்றைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் மருந்தக கொள்கையானது இதுவரை சட்டமூலமாக இருப்பதன் காரணமாக அந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் பொதுமக்களின் நன்மை கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒதுக்கித் தள்ளும் பிரிவினர் அதனை நிராகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய திருத்தப்பட்ட மருந்தக சட்டமூலம் தொடர்பாக நேர்மையாக மற்றும் நியாயமான விமர்சனங்கள் மட்டுமன்றி யோசனைகளையும் முன்வைக்குமாறு இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனத்திடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருந்தக சட்டமூலம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனைகளை கவனத்தில் கொள்வதற்கு தாம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனம் தமது யோசனைகளை முன்வைக்குமாறு வேண்டுகோள் விடுத்த அமைச்சர், புதிய தேசிய மருந்தக கொள்கை மூலமாக நேர்மையாக மருந்துப் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாததுடன் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையொன்றைப் பெற்றுக்கொடுப்பதோடு நியாயமான மருந்தக தொழில்சார் துறையினரை பலப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் கூறினார்.
இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு சிறந்த மற்றும் தரமான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக தாய்லாந்து மற்றும் மலேசிய அரசுடன் எதிர்காலத்தில் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கம் ஒன்றிடம் இருந்து நேரடியாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கம் முதல் முறையாக பங்களாதேஷூடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவ்வாறானதொரு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் மருந்தக வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வாத்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அனைத்து பிரிவுகளின் ஒற்றுமையின் ஊடாக பொதுமக்களுக்கு உச்ச அளவிலான சேவையொன்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட தலைவர் கேர்னல் சந்திரா ஜயரத்ன தேசிய மருந்தக கொள்கைகள் தொடர்பாக கூறுகையில், இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனம் தேசிய மருந்தகக் கொள்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தார். அத்துடன் அதற்கு தேவையான சட்டவிதிகள் மற்றும் விலைப் பயனுள்ள சட்டவிதிகள், தேசிய மருந்தக தொழில்சார் துறைக்கு வழங்க வேண்டிய அழுத்தங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அதனை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.