2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நூடில்ஸ் ஆய்வு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவித்தல்

A.P.Mathan   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக தயாரித்து உண்ணக்கூடிய நூடில்ஸ் வகை ஒன்றில் ஈயம் கலந்துள்ளதாக இந்தியாவில் எழுந்துள்ள சர்ச்சைகளின் பின்னணியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையின் கீழ் இலங்கை சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைச் சபை இது தொடர்பாக உள்நாட்டில் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் விசேட உணவு ஆலோசனைச் சபைக் கூட்டம் ஒன்றை நடாத்தியிருந்தது. 

இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை மற்றும் இலங்கை தர அங்கிகார நிலையத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

இலங்கையிலுள்ள அனைத்து நூடில்ஸ் வகைகளின் உள்ளடக்கம், உற்பத்தி நடைமுறை மற்றும் சேர்வைப் பொருட்கள் தொடர்பான கலந்துரையாடல் இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றிருந்தது. மொனோசோடியம் குளுட்டாமேட் (MSG) இனைத் தவிர இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிலும் இருந்தோ எவ்வகையான நூடில்ஸும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை என்று இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஏனைய மூலப்பொருட்கள், மற்றும் சேர்க்கைப் பொருட்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.  

இதற்குப் புறம்பாக, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் ஆய்வு அறிக்கைகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் நச்சுப்பொருட்கள் தொடர்பான தேசிய தகவல் நிலையத்தின் தலைமை அதிகாரியான வைத்தியர் வருண குணதிலக அவர்களின் ஆலோசனையையும் அதிகாரிகள் பெற்றிருந்தனர்.  

இந்த ஆய்வு முடிகளின் பிரகாரம் இந்த உணவு வகைகளில் உள்ள ஈயத்தின் அளவானது ஏனைய நாடுகளிலுள்ள அளவுகளை விடவும் குறைந்த மட்டத்தில் உள்ளதாக வெளிப்பட்டுள்ளது. உணவு ஆலோசனைச் சபையின் கூட்டத்தின் போது நூடில்ஸ் வகைகளில் இருக்க வேண்டிய ஈயத்தின் அளவு தொடர்பாக எவ்விதமான நியம கட்டுப்பாடுகளோ அல்லது வழிகாட்டல்களோ இலங்கையில் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஏனைய நாடுகளில் ஈயத்தின் அளவு தொடர்பான விவரங்கள் வருமாறு:

இந்தியா - 2.5 மி.கி/கிகி
மலேசியா - 2.0 மி.கி/கிகி
சிங்கப்பூர் - 2.0 மி.கி/கிகி
அவுஸ்திரேலியா - 0.3 மி.கி/கிகி

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், சந்தையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் உள்ள ஈயத்தின் அளவு குறைந்தபட்ச அளவான 0.3 மி.கி/கிகி இனை விடவும் குறைவாகவே உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

எனினும், நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, உணவு ஆலோசனைச் சபை பின்வரும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது:

1.    இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற நூடில்ஸ் வகைகள் அனைத்தும் சந்தையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஈயம், இரசம், ஆசனிக் மற்றும் கட்மியம் தொடர்பான சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

2.    நூடில்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது சந்தையிலுள்ள உற்பத்தித் தொகுதிகளின் மாதிரிகளை, உணவுச் சட்டத்தின் கீழ் (உணவுப் பரிசோதகர்கள்) ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்காக அவற்றிலுள்ள ஈயத்தின் அளவுகளைக் கண்டறியும் சோதனைகளுக்காக உரிய ஆய்வுகூடங்களுக்கும், அனுமதிக்கும் அதிகாரிக்கும் அனுப்பிவைத்தல் வேண்டும்.

3.    ஆய்வுகளின் போது மாதிரிகளில் ஈயத்தின் அளவு 0.3 மி.கி/கிகி இற்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறித்த நூடில்ஸ் உற்பத்தித் தொகுதிகள் அனைத்தும் சந்தையிலிருந்து உடனடியாக மீளப்பெறப்படல் வேண்டும்.

4.    இந்த சர்ச்சை தீரும் வரை அனைத்து நூடில்ஸ் உற்பத்தி நிறுவனங்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் நூடில்ஸ் தொடர்பான விளம்பரங்களையும், ஊக்குவிப்புச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X