2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பசுமை வங்கி வசதிகளை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 ஜூலை 10 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதல் தொகுதி புதிய தலைமுறை தன்னியக்க பணவைப்பு முறை இயந்திரங்களை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த இயந்திர முறை காகித பாவனைக்கு முற்றாக முடிவு கட்டுகின்றது. பசுமை தொழில்நுட்பத்தில் வங்கி செய்து வரும் தொடர்ச்சியான முதலீட்டுக்கு இது மற்றொரு உதாரணமாகும்.

ராஜகிரிய கிளையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 200 நாணயத்தாள்களை ஏற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் வைப்புக்களைச் செய்யலாம். இரண்டு லட்சம் ரூபா வரை ஒரே தடவையில் சேமிப்புக் கணக்கிலோ அல்லது நடைமுறை கணக்கிலோ வைப்பிலிட முடியும்.

இதே இயந்திரத்தின் மூலம் கொமர்ஷல் வங்கியின் கிரடிட் கார்ட் தொடர்பான கொடுப்பனவுகளையும் செய்ய முடியும்.

இந்தப் புதிய பசுமை வங்கி முறையை வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். ரெங்கநாதன் 2015 ஜுன் 30ம் திகதி தொடக்கி வைத்தார். கிளை வலையமைப்புக்கள் ஊடாக இத்தகைய மேலும் பல இயந்திரங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் பண வைப்பு நடவடிக்கைகளின் போது கடதாசி பாவனை கணிசமாகக் குறைக்கப்படும்.

'இந்தப் புவியின் இயற்கை சூழலை பாதுகாக்க உதவும் வங்கியின் திட்டத்துக்கு இந்தப் புதிய இயந்திரத்தின் மூலம் எமது வாடிக்கையாளர்களும் பங்களிப்புச் செய்ய முடியும். இதனூடாக பல வசதிகளையும் அவர்கள் அனுபவிக்க முடியும்' என்று ரெங்கநாதன் கூறினார். 'இந்த முறை மூலம் பண வைப்புச் செய்கின்ற போது வைப்புச் சீட்டுக்களை நிரப்பத் தேவையில்லை. கரும பீடங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையும் இல்லை'என்று அவர் மேலும் கூறினார்.

ஐயாயிரம், ஆயிரம், ஐநூறு மற்றும் நூறு ரூபாய் என நான்கு வகை நாணயத்தாள்களை இந்த இயந்திரம் ஏற்றுக் கொள்ளும். பழுதான அல்லது சேதமடைந்த நாணயத்தாள்களயும் ஏனைய வகை வெளிநாட்டு நாணய நாணயத்தாள்களயும் இயந்திரம் ஏற்றுக் கொள்ளாது. நிராகரிக்கப்படும் நோட்டுக்கள் இயந்திரத்தின் நிராகரிப்பு பிரிவின் ஊடாக உடனடியாக வெளியேற்றப்படும். அதேபோல் நாணய குற்றிகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

கிரடிட் கார்ட் கொடுப்பனவுகளை செலுத்தும் வாடிக்கையாளர்கள் அந்த கார்ட்டை  உள்ளே செலுத்தி கொடுப்பனவுகளை செலுத்தும் தெரிவு உள்ளது. அல்லது இயந்திரத்துக்குள் பணத்தை செலுத்து முன் தங்களது கார்ட் இலக்கங்களைப் பதிவு செய்தும் மேற்படி கொடுப்பனவுகளை செய்யலாம்.

ஓவ்வொரு கொடுப்பனவுகளும் இயந்திரத்தில் உள்ள திரையின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்படும். அதேபோல் ஒவ்வொரு வைப்புக்குமான பற்றுச் சீட்டு ஒன்றையும் இயந்திரம் வழங்கும்.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 243 கிளைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 60க்கும் மேற்பட்ட கிளைகள், வங்கி விடுமுறை தினங்களிலும் திறந்திருக்கும். 614 ATM இயந்திர வலையமைப்பையும் வங்கி கொண்டுள்ளது. இலங்கையில் தனியொரு வங்கி கொண்டுள்ள மிக விசாலமான பணப்பரிமாற்ற வலயமைப்பு இதுவாகும்.

அதிகமான வாடிக்கையாளர்களை இலத்திரனியல் வங்கிப் பழக்கத்துக்கு  திசை திருப்பி காகித பாவனையற்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு மேலதிகமாக கொமர்ஷல் வங்கி சுற்றாடல் தொடர்பான பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சக்தி சேமிப்பின் மூலம் காபன் படிவுகளை குறைத்தல், சக்தி பாவனையை இயன்ற வரை குறைத்தல், பொறுப்பான வாகனத் தொடரணி முகாமைத்துவம், பொறுப்பான கழிவகற்றல் மற்றும் மீள் சுழற்சி முறை, பொறுப்பான தண்ணீர் பாவனை, ஓஸோன் படலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய உற்பத்திகளின் பாவனையை கைவிடல், வங்கிக் கிளைகள் அமைந்துள்ள இடங்களில் உயிர் பல்லினத் தன்மையை பாதுகாத்தல் என்பன அவற்றுள் முக்கிய நடவடிக்கைகளாகும்.

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அண்மைய திட்டங்களில் வங்கி ஹிக்கடுவை கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள  சேதமுற்ற பவளப் பாறைகளை திருத்தி அமைக்கத் தேவையான நிதி உதவிகளை வழங்கியமை, கொழும்பு தேசிய வைத்திய சாலை வளவுக்குள் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பை செப்பனிட்டு இயற்கை அழகு மிக்கதாக மீள வடிவமைத்தமை என்பன மிக முக்கியமான விடயங்களாகும். இதில் தேசிய வைத்தியசாலை நிலப்பரப்பு செப்பனிட்டு வடிவமைக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பிரதான ஆஸ்பத்திரியில் சுற்றாடல் மாசடைதல் பெருமளவுக்கு தடுக்கப்பட்டுள்ளதோடு நோயாளிகளின் மனோநிலை மேம்பாட்டுக்கும் வழியமைக்கப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியே உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியாகும்.2015ல் பினான்ஸ் ஆசியாவால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் நாட்டின் தலைசிறந்த வங்கி என்ற ரீதியில் பல விருதுகளையும் வென்றுள்ளது. 2014ல் இலங்கையின் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் அது தெரிவு செய்யப்பட்டது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இதே தர வரிசையில் இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X