2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

SLT குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 12.2 பில்லியன்

S.Sekar   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) குழுமம், டிசம்பர் 31, 2021 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 12.2 பில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54.3% வளர்ச்சியாகும். அக்காலப்பகுதியில் மொத்த வருமானமாக ரூ. 102.3 பில்லியனைப் பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 12.3% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழுமத்தின் இலாபத்தில் அதன் பல்வேறு வியாபாரப் பிரிவுகளின் உயர் பெறுபேறுகள் பங்களிப்பு வழங்கியிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குழுமத்தின் EBITDA பெறுமதி 16.6% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் தொழிற்படு இலாபம் 19.0% வளர்ச்சியடைந்திருந்தது. ஃபைபர் இணைப்பை (FTTH) விரிவாக்கம் செய்வது தொடர்பில் SLT இன் முதலீடுகள் மற்றும் 4G/LTE வலையமைப்பில் பெருமளவான விரிவாக்கங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் போன்றன புரோட்பான்ட் வருமானத்தில் அதிகளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. மேலும், தரமான கல்வி மற்றும் களிப்பூட்டும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை வழங்குகின்றமைக்காக PEO TV சந்தையில் வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், வருமானத்தில் அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. SLT-MOBITEL இன் சர்வதேச அலகான Xyntac ஒட்டு மொத்த வியாபாரத்திற்கும் வலிமை சேர்ந்திருந்தது. புதிய SEA-ME-WE 6 கேபிளில் முதலீடு மேற்கொள்வதனுடாக, இலங்கையின் சர்வதேச இணைப்புத் திறனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. நவீன வசதிகள் படைத்த டேட்டா நிலையத்தினூடாக(data center), SLT-MOBITEL இன் டிஜிட்டல்(Digital) ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், Akaza multi-cloud இனாலும் நிறுவனத்துக்கு தொடர்ந்தும் பெறுமதி சேர்க்கப்பட்டிருந்தது.

SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டை மீட்டுப் பார்க்கையில், நாம் எதிர்பார்த்ததை விட உயர்ந்த பெறுமதிகளைப் பதிவு செய்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றேன். நிதியியல் பிரிவின் சகல அம்சங்களிலும் இதுவரை பதிவு செய்திருந்த உயர்ந்த பெறுமதியை நாம் எய்தியிருந்ததுடன், கூட்டாண்மை ஆளுகையிலுவும் அனைத்துக்கும் மேலாக தேசிய பொறுப்பிலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தோம். பூஜ்ஜிய மோசடி, கழிவுக் கட்டுப்பாடு, உயர் வினைத்திறன் மற்றும் உள்ளடக்கமான நிர்வாகம் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தியிருந்ததன் காரணமாக 2021 ஆம் ஆண்டில் சகல தடைகளையும் எம்மால் தகர்த்து முன்னேற முடிந்தது. எதிர்காலத்தில் போட்டியை எதிர்கொள்வது மற்றும் SLT குழுமத்துக்கு வாடிக்கையாளர்களை இணைப்பது போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவோம். தொலைத்தொடர்பு என்பதிலிருந்து தொழில்நுட்பம் எனும் நிலைக்கு எமது வியாபாரத்தை மாற்றியமைப்பதில் நாம் கவனம் செலுத்துவோம். அதனூடாக எமது வியாபாரத்தில் நேரடியாக தொடர்பைக் கொண்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்வாங்குவோம். உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனங்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் காணப்படுகின்றன. உலகின் பொருளாதாரத்தை வழிநடத்துவதுடன், மனிதர்களுக்கு தேவைப்படும் சகல அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்பு வழங்குகின்றன. SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் தொழில்நுட்பத்தை மையப்படுத்தி இயங்குவதுடன், இலங்கையில் தொழில்நுட்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய சிறந்த நிலையில் காணப்படுகின்றோம்.” என்றார்.

2021 நான்காம் காலாண்டில் குழுமத்தின் வருமானம் முன்னைய நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.5% இனால் அதிகரித்து ரூ. 25.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. EBITDA மற்றும் தொழிற்படு இலாபம் (Operating Profit) என்பன முறையே 21.3% மற்றும் 34.8% இனால் அதிகரித்திருந்தன. காலாண்டில் குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) ரூ. 3.0 பில்லியனாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 162.9% வளர்ச்சியாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .