
மக்கள் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதும், சிறந்த செயற்றிறன் மிக்கதுமான கட்டமைப்பின் ஊடாக அதியுயர் தரமிக்க வர்த்தக சேவைகளை வழங்குதலை அங்கீகரித்து, இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் (Sri Lanka Standards Institution - SLSI) ISO 9001-2008 இத்தரநிர்ணய சான்றிதழ் மக்கள் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள் திணைக்களமானது, இலங்கையிலுள்ள 13 மில்லியன் மக்களுக்கு, இலகுவான முறையில் வங்கியியல் வசதிகளை அளிப்பதுடன், வங்கியின் 730 கிளைகள் மற்றும் சேமிப்பு நிலையங்கள் ஊடாக இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகப் பரிமாற்ற முனைப்புகளை மேற்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றது.
மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான என்.வசந்தகுமார் இது குறித்து தெரிவிக்கையில், 'மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள் திணைக்களம் ISO 9001-2008 தரநிர்ணய சான்றிதழை பெற்றுள்ளதன் ஊடாக இறக்குமதி ஏற்றுமதி சேவைகளுக்குள் நுழைந்துள்ளது. மிகப்பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ள மக்கள் வங்கியானது நாடளாவிய ரீதியிலுள்ள 730 கிளைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த சேவையளித்து வருகின்றது. எமது வாடிக்கையாளர்களுக்கு அதி உன்னத சேவைகளை அளிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைவான சேவைத்தர நிர்ணயங்களை அமுல்படுத்தியவாறு நாம் பணியாற்றுகின்றோம். இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளை வழங்கும் வகையில், இடையறாது மிகச்சிறந்த சேவையாற்றிய எமது வர்த்தக சேவைகள் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டார்
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் கடுமையான நிபந்தனைகள் அனைத்தும், மக்கள் வங்கியின் பணியாளர்களினாலும், வங்கியில் உபயோகிக்கப்படும் கட்டமைப்புகளினால் கடைப்பிடிக்கப்பட்டதனாலேயே குறித்த ISO 9001-2008 தரநிர்ணய சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் கட்டமைப்புகள் வங்கி ஊழியர்கள், இறக்குமதிப் பத்திரம், இறக்குமதி வசதிகளை செயல்முறைப்படுத்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உத்தரவாதத்தை வழங்குதல் உள்ளடங்கலான செயன்முறைகளை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் செயற்படுத்துவதன் ஊடாக, நாணயக் கடிதங்கள், ஏற்றுமதி இறக்குமதி வசதிகளை முன்னெடுப்பதற்கு உதவுகின்றது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தனது கருத்துகளை தெரிவித்த இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சேனாவீர அவர்கள் 'முதலில், ISO சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் வங்கி குழுவினருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன் உரையை ஆரம்பித்தார். இன்றைய காலகட்டத்தில், வர்த்தக சூழ்நிலைகள், வங்கித்துறையைப் பொறுத்தவரையில் துரித கதியில் மாற்றங்களைப் பெற்று வருகின்றது. வாடிக்கையாளர்கள் தமது தேவைகளைக் கோரிப் பெற்றுக்கொள்ளும் மனநிலையுடன் காணப்படுகின்றனர் என்றும் தொழினுட்ப மேம்பாடுகள் மேம்பட்ட வண்ணம் உள்ளன. ஒழுங்கமைப்பு கோரிக்கைகள் தொடர்ச்சியாக மாற்றத்திற்குட்டபட்டவாறு உள்ளன. அதன் அடிப்படையில் நோக்கும் போது, புதிய போக்குகளுடன் போட்டியிடுதல் வங்கித்துறையைப் பொறுத்தவரையில் மிகப்பெரும் சவாலாகவே காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நிறுவனமும், சரியான தராதர கட்டமைப்புகளை அமுல்படுத்தியவாறு, தரநிர்ணயங்களுக்கு அமைவாக செயற்படுவது மிக முக்கியமாக விளங்குகின்றது. மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள், குறித்த அனைத்து கோரிக்கைகளையும் சந்தித்ததுடன் மாத்திரமல்லாமல், வாடிக்கையாளர்கள் மிகச்சிறந்த சேவைத் தர நியமங்களைப் பெறுதலை உறுதிப்படுத்தும் வகையில் ISO சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்திசெய்துள்ளமையானது எமக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது' என்று குறிப்பிட்டார்.
மக்கள் வங்கியின் கூட்டுவங்கியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் ஜயந்த நியூன்ஹெல அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 'மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகளிலுள்ள எமது குழுவானது மிகச்சிறந்த தரநியமங்களை பெற்றவாறு உயர் நிலையை அடைந்துள்ளது. இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் வரையறுக்கப்பட்ட அனைத்து நியமங்களையும் அமுல்படுத்திய எனது குழு குறித்து மிகப்பெருமிதமடைகின்றேன். இந்த சான்றிதழானது, எமது செயற்பாடுகளை இன்னும் மேம்படுத்த உதவுவதுடன், எமது விநியோக நியமங்களை அதிகரிக்க உதவும். இந்த சான்றிதழானது சேவை சார்ந்த பணி கலாசாரத்தினை கட்டமைப்பதற்கான காரணியாக அமைவதுடன், எமது குழுவினர் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சாத்தியமான சேவைகளை அளிப்பதற்கான ஊக்குவிப்பை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. எமது குழுவினரிடமுள்ள இதுபோன்ற பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன எதிர்காலாத்தில் விநியோகம் குறித்த தரநியமங்களை பேணுவதுடன், அதனை மேம்படுத்தியவாறு, எமது சேவைகளின் செயற்றிறனை மேலும் மேலும் அதிகரிக்க வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை' எனக் கூறினார்.
மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள் திணைக்களமானது, எல்லை கடந்து தமது வர்த்தக முனைப்புகளை முன்னெடுக்கும் ஏராளமான ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு தேவையான சேவைகளை அளித்து வருகின்றது. 103 நாடுகளில் உள்ள 300 இற்கும் மேற்பட்ட தொடர்பாளர்களை உள்ளடக்கிய வலையமைப்பை கொண்டிருக்கும் மக்கள் வங்கியானது, குறித்த ஏற்றுமதி இறக்குமதி தொழில்முயற்சியாளர்கள், புத்தமைவு தொழினுட்பம், அர்ப்பணிப்பு மற்றும் பெறுமதிமிக்க பரிமாற்றங்களை கையாள்வதில் கொண்டுள்ள தசாப்தங்கள் கடந்த அதிசிறந்த அனுபவம் ஆகியவற்றோடு பணியாற்றும் எமது பணியாளர்களின் உதவியுடன், மிக உன்னதமான பெறுமதிமிக்க வாடிக்கையாளர் சேவையை அளிக்கின்றது. வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச பரிமாற்றங்கள் குறித்த துரித தீர்வுகளை அளிக்கும் மக்கள் வங்கி ஊழியர்கள், இருதரப்பினருக்குமிடையிலான வர்த்த பரிமாற்றங்கள் இடம்பெறும் வேளையில் உச்சபட்ச பாதுகாப்பு கிடைத்தலையும் உறுதிசெய்கின்றது.