
செலான் வங்கியானது இலங்கை முழுவதிலுமுள்ள தனது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பரந்த வகைகளிலான காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்கில் அண்மையில் LOLC Insurance Co. நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ளது. உபாய ரீதியிலான இந்தக் கூட்டிணைவின் ஒரு அங்கமாக, LOLC இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சேவை வழங்கும் பிரதிநிதி ஒருவரை செலான் வங்கி நாடெங்கும் இதற்கென பொறுப்பாக நியமிக்கவுள்ளது. இந்நபர், செலான் வங்கி வாடிக்கையாளர்களின் காப்புறுதிசார் தேவைகளை கவனத்திலெடுத்து சேவையாற்றுவார்.
செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கூறுகையில், 'செலான் வங்கி இலங்கை முழுவதும் வாழ்கின்ற தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் மிகச் சிறந்த சௌகரியத்தையும், அதேபோல் கொடுக்கும் பணத்திற்கு மிகச் சிறந்த பெறுமதியையும் அளிக்கின்றது. வங்கியியல் துறையில் சிறப்புத்துவ சேவையின் 25 வருட பூர்த்தியை இவ்வருடம் நாம் கொண்டாடுகின்ற நிலையில் LOLC நிறுவனத்துடன் கைகோர்ப்பதையிட்டும், எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற உற்பத்தி சேவைகளின் தொகுதியை மேலும் பலப்படுத்துவதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். அவர்கள் தமது வங்கியியல் மற்றும் காப்புறுதி தொடர்பான தேவைகள் அனைத்தையும் ஒரேகூரையின் கீழ் பெற்றுக்கொள்ளும் சௌகரியம் இப்போது அவர்களுக்கு கிடைக்கின்றது. அதன்மூலம், செலான் வங்கிக்கான அவர்களது விஜயமானது மேலும் வசதியானதாகவும் வெகுமதியளிப்பாதாகவும் அமையவுள்ளது' என்றார்.
ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதிகள் ஆகிய இரண்டிலும் வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவிலான விடயங்களை உள்ளடக்கிய காப்புறுதி காப்பீட்டை வழங்கும் வகையில் இச் சேவைகள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆயுட் காப்புறுதி பிரிவிலுள்ள உற்பத்திகள் மற்றும் சேவைகள் மேலும் முக்கியத்தும்மிக்க பாதுகாப்பை அளிக்கின்றன. 'LOLC Guaranteed' என்பது ஒரு எளிமையான நல்வெகுமதியான உற்பத்தியாகும். இது, ஆகக் குறைந்த பிரீமியம் கட்டணத் தொகைக்கு உத்தரவாதத்தை அளிக்கின்றது. அதேநேரம், 'LOLC+10' அடிப்படை (கட்டணத்) தொகையை ஒவ்வொரு வருடத்திற்கும் 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகால அடிப்படையிலான இந்தக் காப்புறுதிக் கொள்கைகள் அனைத்தும் காப்புறுதி செய்தவர், அவரது கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தேவையான பரந்துபட்ட விதத்திலான சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. குறுங்கால ஆயுட் காப்புறுதிகளுள் 'Divi saviya' மற்றும் 'Isuru Sahana' போன்றன உள்ளடங்குவதுடன் கடன்கள், குத்தகைகள், மற்றும் சிறிய நடுத்தர முயற்சியாண்மைத் துறையை இலக்காகக் கொண்டுள்ளன. பொதுக் காப்புறுதிப் பிரிவிலுள்ள காப்புறுதி சேவைகள் நெருப்பு, இழப்பு எதிர்ப்பீட்டு மற்றும் கடல்சார் அபாயங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பை வழங்குகின்றது.
LOLC குழும முகாமைத்துவப் பணிப்பாளரும் LOLC இன்சூரன்ஸ் கம்பனியின் தலைவருமான திரு. கபில ஜயவர்தன கூறுகையில், 'செலான் வங்கியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதையிட்டும் அதேபோல், கூடுமானவரை அதிகமான இலங்கையர்களுடன் எமது சேவைகளின் சிறப்புத்துவத்தை பகிர்ந்து கொள்வது குறித்தும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்ற வாடிக்கையாளர் தளத்திற்கு நாடெங்கிலும் பரந்தளவிலான பிரசன்னத்துடன் ஒருங்கிணைந்ததாக செலான் வங்கி வழங்கும் இச்சேவை ஒரு இலகுவான பணியிலக்கு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை' என்றார்.
'செலான் வங்கியானது, வங்கியூடான காப்புறுதி (Bancassurance) சேவைகளில் கடந்த பல வருடங்களாக மிகச் சிறந்த செயலாற்றல்களை விருத்தி செய்துள்ளது. நாடு முழுவதிலும் உறுதியான கிளை வலையமைப்பைக் கொண்டியங்கும் LOLC நிறுவனத்துடனான ஒன்றிணைவு இத் துறைசார் வர்த்தகத்தை மேலும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்லும்' ஏன்றும் ஜயவர்தன உறுதிபடத் தெரிவித்தார்.
'இது செலான் வங்கியுடனான வங்கிக் காப்புறுதி சேவை வழங்கலில் ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த சேவை பிரிவை நாம் விஸ்தரித்து வருகின்ற அதேவேளை, எமது வாடிக்கையாளர்களுக்கு தற்போது நாம் வழங்கி வரும் சௌகரியமிக்க சேவையை மேம்படுத்தும் நோக்கில் மிக விரைவில் மேலும் பல காப்புறுதிச் சேவைகளை விஸ்தரிக்கவுள்ளோம்;' என்று ஆரியரத்ன அழுத்தமாக கூறினார்.
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன்; கடந்த சில வருடங்களாக வியத்தகு இலாப எல்லைகளை எட்டியுள்ள செலான் வங்கியானது அண்மையில் தனது 25 வருட சேவையை பூர்த்தி செய்துள்ளது. அதேவேளை, இலங்கையில் வாழ்கின்ற அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கையை தொடுமளவுக்கு சேவையாற்றுவதில் தொடர்ந்தும் முனைப்புடன் முன்னேறிச் செல்கின்றது. சமகால தொடர்பிணைப்பு வசதியைக் கொண்ட வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ள 112 கிளைகள் மற்றும் 37 விரிவாக்கல் அலுவலகங்களை உள்ளடக்கிய செலான் வங்கியின் 149 சேவை நிலையங்களும் அதற்கு ஆதரவாக செயற்படுகின்ற 154 ATM நிலையங்களும் - இலங்கை முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான திருப்திபெற்ற வாடிக்கையாளர்களுக்கு செலான் வங்கியின் செயலூக்கத்தையும் பரந்த வகைகளிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளையும் வழங்குவதில் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன.