
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. (CCF) ஆனது, ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.எல்.சி. (TFI நிறுவனத்தின் 55,037,154 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை ஒரு பங்கு ரூபா 28 என்ற விலையில் கையகப்படுத்தும் தமது நடவடிக்கை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. இது, ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த சாதாரண வாக்குரிமை பங்குகளின் 96% இனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
1995ஆம் ஆண்டின் கம்பனி கையகப்படுத்துனர் மற்றும் ஒன்றிணைப்பாளர் (திருத்தப்பட்ட) நியதிகளுக்கு அமைவாக, கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. (CCF) ஆனது ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.எல்.சி. (TFI) நிறுவனத்தின் மீதமுள்ள பங்குகளுக்கான சட்ட நியதிப்படியான வழங்கலை மேற்குறிப்பிட்ட பங்கு ஒன்றிற்கு ரூபா 28 என்ற விலையில் உரிய காலத்தில் மேற்கொள்ளும்.
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ரொஷான் எகொடகே கூறுகையில், 'இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட நிதித் துறை கூட்டிணைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் ட்ரேட் ஃபினான்;ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தை கையகப்படுத்தும் இந்நடவடிக்கை காணப்படுகின்றது. ரூபா 1.5 பில்லியன் பெறுமதியில் நாம் தற்போது கையகப்படுத்தியிருக்கும் TFI நிறுவனமானது இலங்கையில் மிகச் சிறப்பாக தொழிற்பட்டு வருகின்ற நிறுவனங்களுள் ஒன்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த கையகப்படுத்தல் முயற்சியானது எமது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிகப் பிரிவுகளையும் பலப்படுத்தும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதேவேளை இலங்கை முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கி வருகின்ற சேவைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கும் நீண்டகாலத்தில் பங்களிப்புச் செய்வதாக அமையும்' என்றார்.
இந்நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட சட்டப்படியான மற்றும் ஒழுங்குபடுத்துதல் விடயங்களைப் பொறுத்தமட்டில், கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. (CCF) ஆனது ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.எல்.சி. (TFI) நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்துவது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி தனது 2014 ஆகஸ்ட் 04ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தலைமைத்துவத்தின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறை கூட்டிணைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் மேற்படி பங்கு கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.