2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆடை உற்பத்தித்துறை அமெரிக்காவின் தொடக்க நாடு-அடிப்படையிலான வரிக்கு தயாராக வேண்டும் - கணநாதன்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடக்க நாடு-அடிப்படையிலான வரி விதிப்பை (origin-based tariff) அமெரிக்கா மேற்கொள்ளுமாயின், இலங்கையின் மாபெரும் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் துறையான ஆடை உற்பத்தித் துறை பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுக்கும் என முன்னாள் இராஜதந்திரி கனா கணநாதன் குறிப்பிட்டார்.

அவ்வாறான முறைமையின் கீழ், இறுதி தயாரிப்பு எங்கு உற்பத்தி செய்யப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளாமல், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் எங்கு இருந்து வந்தன என்பதையே அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கப்படும்.

தற்போதைய இறுதி உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாட்டின் மீது வரி விதிப்பு முறைமையை போலன்றி, தொடக்க நாடு-அடிப்படையிலான வரி விதிப்பை (origin-based tariff) மேற்கொள்ளுமாயின், இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணி வகைகளில் எமது ஆடைத் தொழிற்துறை பெரிதும் தங்கியுள்ளது. இந்த இரு நாடுகளும் தமது சில துறைகளுக்கு அமெரிக்காவின் 50% உயர் வரி விதிப்புக்கு முகங்கொடுத்துள்ளன. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு இந்த தொடக்கநாடு அடிப்படையிலான வரி விதிக்கப்பட்டால், உள்நாட்டில் வெட்டி தைக்கப்படும் ஆடைகளுக்கும் உயர்ந்த வரி அறவிடப்படும்.

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள 20% வரி விதிப்பினூடாக, ஆடைத் தொழிற்துறையில் நாம் கொண்டுள்ள போட்டிகரமான அனுகூலம் பாதிப்படலாம். குறிப்பாக, எமக்கு முக்கியமான சந்தையில் இந்த பாதிப்பு நேரலாம். ஆடை வியாபாரத்தில் எல்லைகள் ஏற்கனவே கடினமானவையாக அமைந்திருக்கும் நிலையில், சடுதியாக பெருமளவு செலவு அதிகரிப்பு ஏற்பட்டால், அமெரிக்காவின் பிரதான விற்பனையாளர்களுடன் இலங்கையின் விநியோகத்தர்கள் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் பாதிக்கப்படலாம்.

சில நாட்களுக்கு முன் டிரம்ப் கையொப்பமிட்ட நிர்வாக உத்தரவின் படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் transshipped (இடைநிலை சரக்குமாற்றம்) செய்யப்பட்டதாக சுங்கத்துறை தீர்மானித்தால், 40% வரி, அபராதம் மற்றும் தொடர்புடைய மூல நாடு வரிகள் விதிக்கப்படும். இது, எமது ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் அபாயத்தை உருவாக்கும் என கணநாதன் மேலும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதியாளர்களும் கொள்கை நிர்ணயிப்பவர்களும் உடனடியாகச் செயல்பட்டு, விநியோகச் சங்கிலிகளை மாற்றியமைத்து, உள்ளூர் திறனை வளர்த்து, உலகளாவிய போட்டித் திறனை வலுப்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இதை முன்கூட்டியே தயார் செய்ய தவறினால், கொள்கை மாற்றம் கடும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் முன்கூட்டிய திட்டமிடல், ஒத்துழைப்பு, புதுமை ஆகியவற்றின் மூலம் இலங்கை, நெருங்கி வரும் அபாயத்தைத் தாங்கும் திறனாக மாற்றிக்கொள்ள முடியும்.

உலக வர்த்தகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; வெறும் எதிர்வினை நடவடிக்கைகள் போதாது. ஆடைத் துறையைப் பாதுகாக்க, வர்த்தக விதிகள் எங்களை பாதிக்கும் வகையில் மாறுவதற்கு முன் இலங்கை துரிதமாகச் செயல்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X