2025 ஜூலை 23, புதன்கிழமை

சம்பத் வங்கியின் சிட்டையின்றிய கொடுக்கல் வாங்கல்கள்

Editorial   / 2018 ஜனவரி 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சம்பத் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு சிட்டையின்றிய கொடுக்கல் வாங்கல் (Slip-less transactions) நடவடிக்கைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. iOS மற்றும் Android தொழில்நுட்ப தளமேடைகளில் mobile app மூலமாகத் தொழிற்படுகின்ற இந்தச் சௌகரியமான கருவி, வாடிக்கையாளர்களுக்குத் தங்குதடையின்றிய அனுபவத்தை வழங்கி, காகிதங்களை பயன்படுத்தாத வங்கிச்சேவையை வழங்கவேண்டும் என்ற சம்பத் வங்கியின் இலக்கை நோக்கிய மற்றுமொரு படியாக அமைந்துள்ளது. 

இந்த அறிமுகத்தின் கீழ், சிட்டையின்றிய கொடுக்கல்-வாங்கல் வசதியானது, வாடிக்கையாளர்கள் எவ்விதமான படிவங்களையும் பூர்த்தி செய்யாது பண வைப்புக்களை அல்லது மீளப்பெறுதல்களை மேற்கொள்ள இடமளிக்கின்றது. காகிதங்களின் பாவனையைக் குறைத்து, வாடிக்கையாளர்கள் இன்னும் சௌகரியமான வழிமுறைகளில் வங்கிச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், கடனட்டைக் கொடுப்பனவுகள், காசோலை வைப்பு வசதிகள் மற்றும் பலவற்றுக்கு சிட்டையின்றிய கொடுக்கல்-வாங்கல் முறைமையை வெகுவிரைவில் அறிமுகப்படுத்துவதற்கு வங்கி திட்டமிட்டுள்ளது. சிட்டையின்றிய கொடுக்கல்வாங்கல் முறைமையின் பயன்களை திறன்பேசி பாவனையாளர்கள் அல்லாதவர்களும் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் கிளைகளின் உள்ளே விசேடமான தனித்த இயந்திர முனையங்களும் விஸ்தரிப்பு நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

‘சம்பத் வங்கியால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் மற்றுமொரு தொழில்நுட்ப சிறப்பம்சமாக இது அமைந்துள்ளதுடன், இதன் மூலமாக புத்தாண்டை டிஜிட்டல் புத்தாக்கத்துடன் ஆரம்பிக்கும் எமது போக்கினை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளோம். 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 டிஜிட்டல் உற்பத்திகளை நாம் அறிமுகம் செய்திருந்ததுடன், 2018இல் சிட்டையின்றிய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்திய ஒரே இலக்குடன் செயற்பட்டு வருகின்றமை அவர்களுடைய வாழ்வில் மகத்தான சௌகரியத்தைத் தோற்றுவித்து, பாதுகாப்பான, விரைவான மற்றும் காகிதங்களின்றிய கொடுக்கல்வாங்கல் வழிமுறையை வழங்க எமக்கு இடமளித்துள்ளது. காகிதங்களின்றிய வங்கிச்சேவை முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எமது இறுதி இலக்கினை நோக்கி முன்னேறுவதற்கு இந்த சமீபத்தைய புத்தாக்கம் வழிவகுத்துள்ளது” என்று சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.  சிட்டையின்றிய கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுப்பதற்கான பதிவு நடைமுறை மிகவும் எளிமையான ஒன்றாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் உரிய app ஐ பதிவிறக்கம் செய்து, தமது பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், மொபைல் இலக்கம் ஆகியவற்றைப் பதிவு செய்து மற்றும் app பயன்பாட்டிற்கான கடவுச்சொல்லை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதல் சௌகரியத்திற்காக பதிவு நடைமுறையின் போது வாடிக்கையாளர்கள் தமது கணக்கு இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொள்ளும் தெரிவையும் கொண்டுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .