2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

டிஜிட்டல் பொருளாதாரம் ஒரு கனவு மட்டும் தானா?

S.Sekar   / 2025 ஜூன் 02 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் நிதி அமைச்சு பெருமளவில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சர் எனும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மேற்கொண்ட உரையின் போது தெரிவித்திருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். 2030 ஆம் ஆண்டில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பெறுமதி 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை எய்தும் எனவும், மொத்த தேசிய உற்பத்தியின் 12 சதவீதமாக அமைந்திருக்கும் எனவும் அரசாங்கம் எதிர்வுகூரியுள்ளது. இந்த ஆண்டில் டிஜிட்டல் மாற்றத்துக்கான மூலோபாய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை ஒன்றை நிறுவி, நாடு பணப்புழக்கமில்லாத பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ள பணிக்கவுள்ளதாகவும் பிரேரித்திருந்தது.

நாட்டின் பொருளாதார செயற்பாடுகளினுள் பணப்புழக்கமில்லாத பரிவர்த்தனைகளை முன்னெடுப்பது என்பது இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கும் பரந்த நடவடிக்கையின் ஒரு முக்கிய பிரிவாக அமைந்துள்ளது. அரசாங்கத்தின் நோக்கம், இந்த பணப்புழக்கமில்லாத பொருளாதாரம் உருவாக்கப்படும் நிலையில், வரி வரம்பினுள் வராமல் இருப்பவர்களை, அந்த வலையினுள் கொண்டு வர முடியும் என்பதுடன், சட்ட விரோதமான நிதிசார் செயற்பாடுகளை இல்லாமல் செய்யக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அவற்றினூடாக இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்திருக்கும் என்பதாகும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் பெப்ரவரி மாதத்தில் GovPay எனும் ஒன்லைன் பரிவர்த்தனை கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. நாட்டின் அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளின் ஆரம்ப நிலையாக இது அமைந்திருந்தது. GovPay இன் அறிமுகத்துடன், அரசாங்க சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான டிஜிட்டல் கொடுப்பனவுகள் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டதுடன், சுமார் 100 அரசாங்க முகவர் அமைப்புகள் இந்த ஒன்லைன் கட்டமைப்பில் இணைந்து கொள்ளும் என எதிர்வுகூரப்பட்டிருந்தது.



நாட்டு மக்கள் மத்தியில் பணப்புழக்கமில்லாத கொடுப்பனவு முறைகளை ஊக்குவிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகம் செய்து முன்னெடுத்த போதிலும், வரி வலையினுள் தாம் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தினாலும், மேலும் பல தடங்கல்களாலும் இந்தப் பணப்புழக்கமில்லாத கொடுப்பனவு முறைகளுக்கு முழுமையாக மாற மக்கள் தயக்கம் காண்பித்து வருவதை அவதானிக்க முடிவதுடன், பணப்புழக்கமில்லாத பரிவர்த்தனைகளில் காணப்படும் சௌகரியமும் மறைக்கப்பட்டுவிடுகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த 2024 மூன்றாம் காலாண்டுக்குரிய கொடுப்பனவு தகவல் வெளியீட்டில், நாட்டில் புழக்கத்திலுள்ள நாணயத்தின் பெறுமதி ரூ. 1.33 ட்ரியல்லயனாக அதிகரித்துள்ளதாகவும், இது 19.7 சதவீத வருடாந்த அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமளவானோரை நேரடியான வரி அறவீட்டு வலையினுள் கொண்டு வரும் அரசாங்கத்தின் முனைப்புடனான செயற்பாடுகளால், டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளுக்கு மாறாமல், நாணயங்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் மக்கள் நாட்டம் காண்பிக்கின்றனர் என பலர் ஊகம் வெளியிட்டுள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் போலன்றி, நாணய பரிவர்த்தனைகளை கண்காணிப்பது கடினமானது. நாணயப் புழக்கத்தினூடான பரிவர்த்தனைகளை அளவிடுவது வரி முகவர் அமைப்புகளுக்கு இயலாத காரியமாகும். அண்மையில் வங்கி வைப்புகளின் மீது வழங்கப்படும் வட்டியில் அறவிடப்பட்ட தக்க வைக்கும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டமையும் இந்த தயக்கத்துக்கும், பின்நிற்பதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

மேலும், நாட்டில் விற்பனை மற்றும் சேவை நிலையங்களுக்கு கார்ட்களினூடாக வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கொடுப்பனவுகளின் மீது மேலதிகமாக 3.5 சதவீத கட்டணத்தை அறவிடுவது சட்டவிரோதமான செயல் என இலங்கை மத்திய வங்கி பல அறிவித்தல்களை வழங்கியிருந்த போதிலும், தொடர்ந்தும் அந்த சட்டவிரோதமான செயற்பாடுகளை பல விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் பின்பற்றி, வாடிக்கையாளர்களை நாணயத்தாள்களை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தூண்டுகின்றமையும் நாட்டினுள் பணப்புழக்கமற்ற சமூகத்தை ஏற்படுத்துவதற்கு பெரிதும் தடங்கலாக அமைந்துள்ளது. சிறியளவிலான வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளையே எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, வாகன சவாரி வாடகை சேவை வழங்கும் பிரபல போக்குவரத்து சேவை செயலிகளில் தம்மை பதிவு செய்து கொண்டு சேவைகளை வழங்கும் சாரதிகள் கூட கார்ட் கொடுப்பனவுகளை ஏற்க மறுக்கும் செயற்பாடு இலங்கையில் வழமையானதாக அமைந்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய, அரச துறையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் கூட இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுக்கு தடங்கலாக அமைந்துள்ளன. குறிப்பாக, அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட GovPay ஒன்லைன் கட்டமைப்பினூடாக, சாரதிகளுக்கு வீதி விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அதற்கான போக்குவரத்து பொலிசாரின் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகத்துக்கு, தபால் சேவை சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த ஒன்லைன் முறைமைக்கு தண்டம் செலுத்துவது மாறினால், தபால் திணைக்களத்துக்கு ரூ. 600 மில்லியனிலிருந்து ரூ. 800 மில்லியன் வரை வருடாந்தம் இழப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தன. எவ்வாறாயினும், இந்தத் திட்டம் பரீட்சார்த்த ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாட்டின் அனைத்து பாகங்களினும் அறிமுகம் செய்யப்படவில்லை. அதற்கு இவ்வாறான எதிர்ப்புகளும் காரணமாக அமைந்திருக்கக்கூடும். உண்மையில் இந்தத் திட்டம் நாட்டின் சகல பாகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்திருக்கும். தபால் திணைக்களமும் அரச நிர்வாகத்தின் கீழ் அமைந்தது தானே.

மற்றுமொரு பாரிய பிரச்சனையாக, நாட்டில் தற்போது காணப்படும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களின் புரோட்பான்ட் வலையமைப்பு சேவை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளன. விசேடமாக முன்னணி சேவை வழங்குனர்களின் சமூக வலைத்தளங்களுக்குச் சென்று அதில் பதிவிடப்பட்டிருக்கும் கருத்துகளைப் பார்த்தால் வலையமைப்பின் தரம் எந்தளவு மோசமானதாக அமைந்துள்ளது என்பது புலனாகும். இவ்வாறிருக்கையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாறுவது என்பது எந்தளவுக்கு சாத்தியமாகும். 5G இருக்கட்டும், முதலில் 3G மற்றும் 4G வலையமைப்பை சீராக வழங்கவும் போன்ற பல கருத்துகள் பாவனையாளர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாறுவது என்பது, கிராமத்தவரும் அதற்கு தம்மை தயார்ப்படுத்த வேண்டும். குறிப்பாக, தற்போதைய பொருளாதார சூழலில் அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் காணப்பட்டாலும், அவற்றின் தரம், பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அத்துடன், நகர்பகுதிகளுக்கும், கிராமப்புறங்களுக்குமிடையே டிஜிட்டல் இடைவெளி ஒன்றும் பெரியளவில் காணப்படுகிறது. டிஜிட்டல் பொருளாதாரம் என்பது பலரின் கனவாக அமைந்திருந்த போதிலும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சவால்கள் பலதை கடக்க வேண்டியுள்ளது.

அனுர அரசாங்கம் அறிமுகம் செய்த GovPay டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பை பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களையும் முதலில் இணங்கச் செய்து ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .