2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டொலர் வரக்கூடிய ஒரு வழி

S.Sekar   / 2022 ஜூன் 18 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது அறிவுக்கு எட்டிய உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கூடிய ஒரு தீர்வை நாம் இங்கு முன்வைத்துள்ளோம், வாசகர்களாகிய உங்களிடமும் இது போன்ற சிந்தனைகள், கருத்துகள் இருந்தால் அவற்றை business@tamilmirror.lk எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

 

ச.சேகர்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

நாட்டினுள் அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் தற்போதைய அத்தியாவசிய தேவையாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திலும், பொது மேடைகளிலும் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், டொலர் இன்மையே இந்தப் பிரச்சனைக்கு காரணம் எனக்கூறி வந்தாலும், அதனை நாட்டினுள் கொண்டு வருவதற்கு எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது பற்றி இதுவரையில் பயனுள்ள, நடைமுறைச் சாத்தியமான எந்தவொரு திட்டங்களையும் முன்வைப்பதை காண முடியவில்லை.

தற்போது அரசியலில் அதிகளவு பேசப்படும் நபராக அமைந்திருக்கும் பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேராவும் நாட்டுக்கு 2030 ஆம் ஆண்டளவில் பயன்தரக்கூடிய பத்தாண்டு திட்டமொன்றை முன்மொழிந்திருப்பதை அவதானிக்க முடிந்திருந்தது. இதில் வெளிநாட்டவருக்கு இலங்கையில் குறிப்பிட்ட அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்வதனூடாக அவர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு குடியுரிமை வழங்குவது போன்றதான முன்மொழிவுகள் உள்ளடங்கியுள்ளன.

நாட்டின் பிரதான அந்நியச் செலாவணி வருவாயீட்டும் துறைகளில் ஒன்றான சுற்றுலாத் துறை கடந்த மார்ச் மாதமளவில் ஓரளவு தலைநிமிர்த்தியிருந்த போதிலும், மார்ச் மாத இறுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள், நெருக்கடி நிலைகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்நிலையில், நாட்டில் குறுகிய காலப்பகுதிக்கு தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளே தற்போதைய சூழலில் நாட்டுக்கு வரத் தயங்குகின்றனர். இந்நிலையில், பத்தாண்டு காலப்பகுதிக்கு, தம்வசமிருக்கும் பணத்தை இலங்கையில் முதலீடு செய்து அல்லது வைப்புச் செய்து தங்கியிருப்பது தொடர்பான தீர்மானத்தை எந்தவொரு அறிவார்ந்த வெளிநாட்டவரும் மேற்கொள்வாரா என்பது சந்தேகமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், இளம் இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் அதிகளவு ஆர்வம் காண்பிக்கும் ஒரு சூழலில், இவ்வாறான முன்மொழிவுகள் நகைக்கும் செயற்பாடுகளாக அமைந்திருக்கின்றன.

சரி, நாட்டினுள் டொலர் கொண்டு வருவதற்கு எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனப் பார்த்தால், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் பலர் தமது சொந்தங்களுக்கு தாம் உழைக்கும் பணத்தை அனுப்புகின்றனர். இதற்காக வங்கிகளைப் பயன்படுத்துமாறும், அதற்காக அவர்கள் அனுப்பும் பணத்துக்கு மேலதிகமாக ஒவ்வொரு டொலருக்கும் பத்து ரூபாய் மேலதிகமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டும் அண்மைக் காலத்தில் மத்திய வங்கியினால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனாலும், உண்டியல் எனப்படும் நபர்களினூடாக பணத்தை அனுப்பும் முறையையே இன்றும் பலர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இது அவர்களுக்கு அதிகளவு இலாபத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. குறிப்பாக நாணயமாற்று விகிதத்தை எடுத்துக் கொண்டால், உண்டியல் முறையில் பணத்தை அனுப்பும் போது, வங்கிகளால் வழங்கப்படும் நாணயப் பரிமாற்றத்தை விடவும், அவர்களின் பெறுமதி உயர்வாக உள்ளது. அத்துடன், வங்கிகளால் அறவிடப்படும் சேவைக் கட்டணங்களை விடவும் குறைவான கட்டணங்களை இந்த உண்டியல் செயற்பாட்டாளர்கள் பெறுகின்றனர்.

உண்டியல் முறை என்பது உண்மையில் நாட்டுக்கு எவ்விதமான நன்மையை ஏற்படுத்துவதில்லை. வங்கிக் கட்டமைப்புக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும் பட்சத்திலேயே, அதனைக் கொண்டு நாட்டுக்கு தேவையான இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு வெளிநாடுகளில் பணியாற்றுவோரைக் கவர்வதற்காக செய்யக்கூடிய ஒரு திட்டமாக, இலங்கையில் வசிக்கும் அவர்களின் உடனடி குடும்பத்தாருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் மேற்கொள்ளலாம். குறிப்பாக, தற்போது வயது, பால், இன வேறுபாடின்றி அனைவருமே வரிசைகளில் நின்றே எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் போன்ற தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு அரசாங்கத்தினால் அறிவிப்பு வழங்கி, தாம் பணியாற்றும் நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்து, அவர்கள் தமது இலங்கையிலுள்ள உறவுகளின் வங்கிக் கணக்குக்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகை பணத்தை அனுப்பும் போது, இங்குள்ள உறவுகளின் இருப்பிடத்துக்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள், எரிவாயு போன்றவற்ற விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம். அதுபோன்று எரிபொருள் நிரப்புவதற்கு அவர்களுக்கென வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் நேரத்தை ஒதுக்கி, வரிசைகளில் காத்திருக்காமல், குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்தலாம். அதுபோன்றே அரிசி, மா, சீனி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும் அவர்களின் இருப்பிடத்துக்கு வழங்க, அல்லது அருகாமையிலுள்ள சதொச நிலையத்தினூடாக அவர்களுக்கென காலம் ஒதுக்கி, பெற்றுக் கொள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்காக அவர்களுக்கென ஒரு விசேட அடையாள அட்டையை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறன செயற்பாட்டினூடாக, வெளிநாட்டில் பணியாற்றும் பணியாளர்கள் தமது உறவுகளின் நலன் பேணப்படுவதை உணர்ந்து, தொடர்ந்தும் இந்த சட்டபூர்வமான முறைகளினூடாக நாட்டுக்கு, தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக சட்டபூர்வமான முறைகளினூடாக நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்களின் பண அனுப்புகை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அண்மையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த புள்ளி விவரங்கள் காண்பிக்கின்றன.

குறிப்பாக, கடந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதத்தில் நாட்டுக்கு கிடைத்திருந்த வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனுப்பிய பணத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 53% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதாரணமாக நாட்டின் மாதாந்த நுகர்வுக்கு அவசியமான எரிபொருள் கொள்வனவுக்கான தொகை 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. மே மாதத்தில் இலங்கைக்கு 304 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களை கவரும் (மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட மேலதிகமாக பணம் வழங்கும் சில்லறைத் திட்டங்களல்ல) மேற்படி முன்மொழிந்த குடும்பத்தாருக்கு வெகுமதியளிக்கும், அவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துமானால், இந்தத் தொகையை மாதாந்த எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அளவுக்கு அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எரிபொருள் விநியோகத்துக்கு ஜுலை மாதம் முதல் வாரம் முதல் கோட்டா முறைமையை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதன் நடைமுறைச் சாத்தியம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது பற்றி உடனடியாக அறிந்து கொள்ள முடியாவிடினும், இவ்வாறான திட்டங்களுக்கு மாறாக, இது போன்ற மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரக்கூடிய திட்டங்களில் கவனம் செலுத்தலாம்.

புதிய பிரதமர் பதிவியேற்று ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையில், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக வழங்கியிருந்த உறுதி மொழிகளில் எவ்விதமான முன்னேற்றங்களும் இதுவரையில் பதிவாகியிருப்பதை காணமுடியவில்லை. 21 ஆம் திருத்தமும் இதுவரையில் வரவில்லை.

எமது அறிவுக்கு எட்டிய உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கூடிய ஒரு தீர்வை நாம் இங்கு முன்வைத்துள்ளோம், வாசகர்களாகிய உங்களிடமும் இது போன்ற சிந்தனைகள், கருத்துகள் இருந்தால் அவற்றை business@tamilmirror.lk எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X