2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

தனிமனித தீர்மானம் பல கோடி மக்களை பாதிக்குமா?

S.Sekar   / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

அமெரிக்க ஜனாதிபதியினால் தொடர்ந்து மாற்றப்படும் வரி விதிப்புகள் பற்றி தற்போது சில மாதங்களாகவே பேசப்படும் விடயமாக உள்ளது. ஆரம்பத்தில் இலங்கைக்கு 44 சதவீதம் என அறிவிக்கப்பட்ட வரி, படிப்படியாக குறைந்தது தற்போது 20 சதவீதமாகியுள்ளது. இதில் இலங்கையின் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், அதில் அமெரிக்காவுடன் உடன்பட்ட விடயங்கள் பற்றி பொது வெளியில் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து நாட்டின் எதிர்தரப்பினர் வெளிப்படுத்துமாறு கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வாகனங்களை தீர்வை இன்றி இறக்குமதி செய்யுமாறு இலங்கையிடம் கடந்த வாரம் அமெரிக்காவிடமிருந்து கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக இந்த விடயம் தொடர்பில் இலங்கை தரப்பு எவ்விதமான பதில்களையும் வழங்காத போதிலும், இந்த விடயத்துக்கு கீழே மீண்டும் வருவோம்.

இது ஒருபுறமிருக்க, கடந்த வாரத்தின் பேசு பொருளாக இந்தியாவின் மீது அமெரிக்க அதிபர் அறிவித்திருந்த 25 சதவீத மேலதிக வரி விதிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதி செய்வதை கண்டிக்கும் வகையில் இந்த வரி அதிகரிப்பை இந்தியா மீது மேற்கொள்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் தமது உரையில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா மட்டும் தானா எரிபொருள் கொள்வனவு செய்கிறது? பிராந்தியத்தில் மேலும் பல நாடுகள் ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்கின்றன. அவ்வாறிருக்க இந்தியா மீது மாத்திரம் இந்த மேலதிக வரி விதிப்பை ட்ரம்ப் மேற்கொள்வதற்கு, எரிபொருளுக்கு அப்பாலான சில காரணிகள் இருக்கக்கூடும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே நட்பு நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது. குறிப்பாக, இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குமிடையே சிறந்த நட்புறவு உள்ளது. அதை அவர்கள் பல தடவை பொது வெளியில் பகிரங்கமாக தெரியப்படுத்தியுள்ளனர்.

ஆனாலும், சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே மூண்ட முறுகல் நிலையின் போது, அதில் தலையிட்டு இரு நாடுகளுக்குமிடையே முறுகல் நிலையை இல்லாமல் செய்வதில் ட்ரம்ப் பங்காற்றியிருந்தார். முதன் முதலில் இரு நாடுகளுக்குமிடையே ஒரு யுத்த நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை ட்ரம்ப் உலகுக்கு அறிவித்தார்.

அதற்காக ட்ரப்ம்பிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்குமாறு பாகிஸ்தான் பரிந்துரை செய்ததாக அறிவித்தது. ஆனாலும், இந்தியா அவ்வாறான எவ்விதமான அறிவித்தலையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, தமக்கு எவ்விதமான வெளி அழுத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை, சுயமாக யுத்த நிறுத்தத்துக்கு முன்வந்ததாக இந்தியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால், தெற்காசிய பிராந்தியத்தில் மூழவிருந்த மாபெரும் ஒரு யுத்தம், ஒரு அணு ஆயுத பிரயோக போரை தாம் தவிர்க்க பேச்சுகளில் ஈடுபட்ட போதிலும், அது தொடர்பில் தமக்கு எவ்விதமான நன்றியை அல்லது பதிலை இந்தியா தெரிவிக்கவில்லை எனும் ஒரு அதிருப்தி நிலை ட்ரம்ப்புக்கு இருந்திருக்கலாம். அதனை வெளிப்பாடாகவும், இந்த அதிகரித்த வரி விதிப்பு அமைந்திருக்கும்.

மேலும், இந்த ரஷ்ய எரிபொருள் விவகாரம் தொடர்பில் இந்தியாவின் முக்கிய உயர்மட்ட பிரமுகர் ஒருவருடன் அமெரிக்க உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்ட போது, ட்ரம்ப் தரப்பிலிருந்து, ரஷ்ய இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவுக்கு உறுதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உக்ரேனுடன் ரஷ்யா மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளுக்கு இந்த வியாபார கொடுக்கல் வாங்கல்கள் மறைமுகமாக சாதகமாக அமைந்துள்ளன என்பது ட்ரம்ப் தரப்பின் வாதமாக அமைந்திருந்த போதிலும், உலகின் மாபெரும் வல்லரசு எனும் தனது நிலையை, தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையிலான ஆணவப் போக்கிலமைந்த ஒரு அழுத்தப் பிரயோகமாகவே இந்தியா மீதான இந்த அழுத்தம் அமைந்திருந்தது.

எவ்வாறாயினும், உலகில் வேகமான வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடு இந்தியா. உலகின் நான்காவது வலுவான பொருளாதார நாடு எனும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது. மூன்று தசாப்த காலப்பகுதிக்கு முன்பிருந்த இந்தியா அல்ல தற்போதைய இந்தியா. பல துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளதுடன், உலகப் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு மாபெரும் நாடாக திகழ்கிறது.

இதன் பின்புலத்தில், அமெரிக்க அதிபரின் அழுத்தமான கோரிக்கைக்கு செவிசாய்க்க இந்திய உயர்மட்டக்குழு மறுப்புத் தெரிவித்திருந்தது. தமது நாட்டின் இறையாண்மையில் இதர நாட்டின் தலையீட்டை வலுவான நிலையிலுள்ள எந்தவொரு நாடும் விரும்பாது. குறிப்பாக, இந்தியா போன்ற உலகின் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு எந்நிலையிலும் விரும்பாது. அது இந்திய உயர்மட்டக்குழுவின் பேச்சுவார்த்தையின் போது தெளிவாக வெளிப்பட்டிருந்தது.

தமது பேச்சுக்கு மறுபேச்சை அல்லது மறுகருத்தைக்கூட விரும்பாத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இது பெரும் அடியாக அமைந்திருந்தது. இந்த சூடான பேச்சுவார்த்தை அமெரிக்கா – இந்தியா இடையிலான நட்பில் விரிசலை தோற்றுவித்துவிடுமோ எனும் ஒரு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

சரி, மேலே நான் இலங்கையின் நிலை பற்றி குறிப்பிட்டிருந்த போது, அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பில் இலங்கை அமைதி காப்பது அல்லது உடனடியாக எவ்விதமான பதிலையும் வெளியிடாமை தொடர்பில் கீழே பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன், அது இந்த பொருளாதார ரீதியான உறுதித் தன்மையைப் பற்றியதாகும்.

இந்தியாவின் நிலை, அந்த நாட்டின் பெருமளவான மக்கள் தொகை, அதன் வளங்கள், பேரம் பேசும் ஆற்றல், பொருளாதார வலிமை மற்றும் நாட்டின் தலைமையின் சிறந்த ஆளுமை போன்றன அமெரிக்கா போன்ற உலகின் வல்லரசின் கோரிக்கைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலைக்கு அதனை கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் செறிந்துள்ளது. தொழினுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வுகள், பல அமெரிக்க தொழினுட்ப நிறுவனங்களின் மாபெரும் சந்தையாக இந்தியா அமைந்துள்ளது. 5 மில்லியனுக்கு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவின் டயஸ்பொராக்களாக உள்ளனர். 3 இலட்சத்துக்கு அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். இவ்வாறு, அமெரிக்காவின் இயக்கத்தில் செல்வாக்கும் செலுத்தும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா – சீனா இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த இடைவெளியை இந்தியா நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளது என்றே குறிப்பிடலாம்.

இலங்கைக்கு அவ்வாறான செல்வாக்குச் செலுத்தக்கூடிய காரணிகள் ஏதாவது உண்டா? பேரம் பேசக்கூடிய நிலையில் தான் இலங்கை உள்ளதா? இந்த பொருளாதார ஜாம்பவான்களின் மூளாப்போர் நிலையிலிருந்து இலங்கையின் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களை கற்றுக் கொள்வார்களா?

பாராளுமன்றம் வந்து, எதிர்க்கட்சியை சாடி, பேச்சுவார்த்தைகளில் நாம் சாதித்துவிட்டோம், நம் அண்டை நாடு கோட்டைவிட்டுவிட்டது போன்ற தொனியில் பேசி, ஆபத்தில் கைகொடுத்த தோழனுக்கு ஆபத்து நேரும் போது, ஏளனச் சிரிப்பு செய்வது சரியா? அல்லது அந்நாடு மூன்று தசாப்த காலப்பகுதியில் அவ்வாறு எதிர்ப்பாற்றலைக் கொண்டிருக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதே என எண்ணி, நாமும் அதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என திடசங்கற்பம் மேற்கொள்வது சரியா? உலகத் தலைவர்களே, அனைவரையும் சிரிக்க வைக்கும் தீர்மானங்களை மாற்றி மாற்றி மேற்கொள்ளும் போது, எம் தலைவர்கள் எம்மட்டில் இருக்கிறார்கள்?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .