Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 05 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச. சேகர்
கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக மார்ச் 17ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், பல வியாபார செயற்பாடுகள் இன்னமும் முடங்கியுள்ளன.
குறிப்பாக, கொழும்பு - புறக்கோட்டை பகுதியை எடுத்துக் கொண்டால், அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய பொருள்கள் வியாபாரங்கள் தவிர்ந்த ஏனைய ஆடையகங்கள், ஆபரண விற்பனை நிலையங்கள், இலத்திரனியல் பொருள்கள் விற்பனை நிலையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் போன்றன மூடப்பட்டு முடங்கிய நிலையிலுள்ளன.
இவற்றில் பணியாற்றும் பெரும்பாலான மலையக பகுதியைச் சேர்ந்தவர்கள், தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ள நிலையில், மேலும் பலர் தமது சொந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலையில், கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் உறவினர்களின் பகுதிகளிலும், நண்பர்களின் இருப்பிடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மார்ச் மாத சம்பளக் கொடுப்பனவு மற்றும் ஏப்ரலுக்கான சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தமிழ்மிரரின் வாணிப பகுதியுடன் பிரத்தியேகமாகத் தொடர்பு கொண்டு அறிவித்திருந்தனர்.
வியாபார உரிமையாளர்களிடம் இந்த விடயம் பற்றித் தொடர்புகொண்டு கேட்டபோது, வர்த்தக வியாபாரச் செயற்பாடுகள் முடங்கியுள்ளதன் காரணமாகவும் தாம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகள் மூடப்பட்டுள்ளமை காரணமாகவும் சம்பளக் கொடுப்பனவைத் தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
மேலும், தாம் தற்போது வீடுகளில் இருப்பதாகவும் சம்பளம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அலுவலகத்தில் காணப்படுவதாகவும் அலுவலகத்துக்குச் சென்ற பின்னரே அவற்றைக் கையாண்டு தம்மால் சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். தற்போது வீட்டிலிருந்தவாறு எவ்வாறான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது எனச் சினத்துடன் சில முதலாளிமார் குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் எமக்குத் தெரிவித்தனர்.
இரு மாதங்களாகத் தமக்குச் சம்பளம் கிடைக்காத இவ்வாறான சூழலில், தமது சொந்தப் பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு அவசியமான பணத்தை அனுப்ப முடியாத நிலையில் தாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தம்மால் வெளியில் சென்று, வேறெந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தமது நிலையை வெளியில் சொல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் மாறாக, இந்த விடயங்களை தொழிற்சங்கம், அரசியல் மட்டத்துக்குக் கொண்டு சென்றால் தமது தொழிலுக்கு அது பாதிப்பாக அமைந்துவிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
“எமது நிறுவனத்தில் ஊழியர்கள் சுமார் 60 பேர் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஆகக்குறைந்தது 15 வருடங்களாக இந்நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். அதாவது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நிறுவனத்தில் புதிதாக எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. பணியாற்றும் அனைவரும் நிறுவனத்தில் அர்ப்பணிப்புடன், நேர்மையாக செயலாற்றுபவர்கள். நாம் தங்க நகை சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறான நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த நோய் பரவல் இலங்கையிலும் ஆரம்பித்தத்தை தொடர்ந்து, கடந்த ஒன்றறை மாத காலமாக நாம் பணிக்கு செல்வதில்லை. வேலைத்தளம் மூடப்பட்டுள்ளது. எமது வியாபார செயற்பாடுகளை வீட்டிலிருந்து மேற்கொள்ள முடியாது. தங்கம் உருக்கி, ஆபரணங்களை வடிவமைக்கும் செயற்பாடு, குறித்த தொழிற்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை வீடுகளிலிருந்து செய்ய முடியாது. ஆனாலும், நாம், மார்ச் 20ஆம் திகதி வரை பணியாற்றியுள்ளோம். மார்ச் கொடுப்பனவு கூட எமக்கு இன்னமும் வழங்கப்படாமலுள்ளது. எமக்கு குடும்பம் உள்ளது. அவர்களுக்கு மாதாந்த செலவுகள் உள்ளன. இந்த வருமானத்தை நம்பியே நாம் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக எமது குடும்பப் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றோம். இந்நிலையில், இப்படியானதொரு நிலை எமக்கு ஏற்பட்டுள்ளமை, எம்மைப் பெரிதும் நெருக்கடியான நிலைக்கு ஆளாக்கியுள்ளது” எனப் பாதிக்கப்பட்ட ஆபரணத்துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
வங்கிச் செயற்பாடுகள் தற்போது வழமை போல இடம்பெறாவிட்டாலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இணையவழி கொடுப்பனவுகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடிய வகையில் அவை மெருகேற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், வியாபாரங்கள் தமது வங்கிக் கிளையுடன் நேரடியாக கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்த முடியாவிடினும், சம்பளம் சார்ந்த ஊழியர்களின் உணர்வுபூர்வமான, வாழ்வாதாரத் தேவையை கவனத்தில் கொண்டு, கிளை மேலதிகாரியுடன் தொடர்பை ஏற்படுத்தி, திறந்திருக்கும் பிரிதொரு கிளையினூடாக சம்பளக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கலாம்.
அத்துடன், சம்பளக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமது அலுவலகங்களுக்குப் பயணிப்பதற்கு பொலிஸ் ஊரடங்கு அனுமதியை சுலபமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
மேலும் சில நிறுவனங்கள் ஏப்ரலலுக்கான சம்பளக் கொடுப்பனவை குறைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட சில ஊழியர்கள் தமிழ்மிரர் வாணிபப் பகுதிக்கு தெரிவித்தனர். இந்நிலைமை தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், “எமது நிறுவனத்தில் 80 பேர் வரை பணியாற்றுகின்றனர். வியாபாரத்தின் நிலைபேறாண்மையை கவனத்தில் கொண்டு, வழங்கப்படும் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை குறைத்து வழங்க தீர்மானித்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. நாம் தற்போது வீடுகளிலிருந்து பணிபுரிகின்றோம். எமது நிறுவனத்தில் சுமார் 50 சதவீதமானவர்களுக்கு வீடுகளிலிருந்து பணிபுரியலாம். இந்நிலையில் பலருக்கும் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து பணியாற்றும் போது எமக்கு செலவுகள் அதிகமாக உள்ளது. இன்னமும் மின்சாரக் கட்டணப்பட்டியல் கைக்கு கிடைக்கவில்லை, நீர் கட்டணப்பட்டியல் கிடைக்கவில்லை. முன்னைய மாதங்களை விட இணையப் பாவனை (டேடா), தொலைபேசி பாவனைக் கட்டணம் அதிகரித்துள்ளது. ஏனெனில் நாம் தொலைபேசியில் பலருடன் அலுவலக தேவை நிமித்தம் உரையாட வேண்டியுள்ளது. வீடுகளில் எமது சொந்தக் கணினியையே நாம் பயன்படுத்துகின்றோம். தற்போது அதிகம் வெப்பமான வானிலை நிலவுகின்றது. மின்விசிறியை எவ்வேளையிலும் இயக்க வேண்டியுள்ளது. போக்குவரத்துச் செலவு குறைந்துள்ள போதிலும், வீட்டிலிருந்து பணியாற்றுவதால் எம்மால் பணியாற்றும் நேரத்தை மட்டுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் என அனைத்து நாள்களிலும் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில், முதல் மாதத்திலேயே 30 – 40 சதவீதம் சம்பளக் குறைப்பு என்பது எம்மால் ஜீரணித்துக் கொள்ள கஷ்டமாகவுள்ளது. தற்போதுள்ள இந்த ஊரடங்குநிலை மேலும் தொடருமானால் அடுத்தடுத்த மாதங்களில் சம்பளக் குறைப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்” என, பாதிக்கப்பட்ட மற்றுமொரு வியாபாரத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பளக் குறைப்பு என்பது நியாயமான முறையில் அமைந்திருக்க வேண்டும். வீடுகளிலிருந்தவாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைக்கப்படும் தொகைக்கும், எதுவுமே செய்ய முடியாத நிலையிலிருக்கும் ஊழியர்களுக்கு குறைக்கப்படும் தொகைக்குமிடையே வேறுபாடு காணப்பட வேண்டும். இந்தக் குறைப்புத் தொடர்பான தீர்மானங்கள் ஊழியர்களுக்கு வெளிப்படையானதாக அமைந்திருக்க வேண்டும். அத்துடன், வீடுகளிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிப்பதற்கு அவர்களுக்கு ஏதேனும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம். அவ்வாறான செயற்பாடுகளினூடாக, நிறுவனங்கள் மீது ஊழியர்களின் நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். வியாபாரங்களை பொறுத்தமட்டில், ஊழியர்களை அலுவலகங்களில் பேணுவதற்கான பராமரிப்புச் செலவுகள் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் குறைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பல தொடர்ந்தும் தமது சேவைகளைத் தடங்கல்களின்றி வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் வகையில், தமது ஊழியர்களுக்கு வீடுகளிலிருந்தவாறே பணியாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. டேடா பாவனைக்காக ரவுடர்கள் கொள்வனவு செய்யப்பட்டு ஒவ்வோர் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், தமது அலுவலகத்திலுள்ள கணினிகளை வீடுகளுக்குக் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பளக் குறைப்பு தொடர்பான தீர்மானத்தை நிர்வாகம் மாத்திரம் மேற்கொள்ள முடியாது, அதற்கு ஊழியர்களும் உடன்பட வேண்டும் என இலங்கையின் தொழிற்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டுள்ளதால், பொருளாதார நெருக்கடி ஏற்படும் சவால் எழுந்துள்ள நிலையில், வியாபாரங்களின் நிலைத்திருப்புக்குச் சில முன்னேற்பாடுகளை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில், இரு தரப்பும் பெரிதும் பாதிக்கப்படாத வகையில், வெளிப்படையான வகையில் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனூடாக, சுமுகமாகப் பணிச்சூழலைப் பேணக்கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago