2025 ஜூலை 23, புதன்கிழமை

தேங்காய் இறக்குமதி தீர்மானத்துக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 ஜனவரி 09 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுத்தேங்காய் இறக்குமதியை முன்னெடுப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு உள்நாட்டின் தேங்காய் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படுமாயின், அது உள்நாட்டின் தேங்காய் உற்பத்தியைப் பாதித்துவிடும் என அறிவித்துள்ளதுடன், தற்போது தென்னை மரங்களில் பரவி வரும் உண்ணி நோய் காரணமாக மொத்த தென்னஞ்செய்கையில் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த இரு தசாப்த காலமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 

தேங்காய் இறக்குமதி மேற்கொள்ளப்படுமாயின், இலங்கையின் உயர் ரக தேங்காய்க்கு காணப்படும் கீர்த்தி பாதிக்கப்படும் என்பதுடன், இலங்கைத் தேயிலைக்கு நடந்ததை போன்று, குறைந்த தரமான தேயிலை, உயர்ரகத் தேயிலையுடன் கலக்கப்பட்டதை போன்றநிலை தேங்காய்க்கும் ஏற்படக்கூடும் எனத் தென்னை வளர்ப்பாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த பி.சமரகோன் தெரிவித்தார்.  

இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் விளையும் தேங்காயில் காணப்படாத பிரத்தியேகமான நிறம், கட்டமைப்பு மற்றும் சுவை இலங்கையில் காணப்படும் தேங்காயில் கிடைக்கிறது.

இதன் காரணமாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரு தொன் தேங்காய்க்கு 3,500 அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஏனைய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் ஒரு தொன் தேங்காய்க்கு 2,900 அமெரிக்க டொலர்கள் வரையில் மாத்திரமே கிடைக்கின்றன.  

இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படுமாயின், அந்நாட்டு தென்னஞ்செய்கை சுமார் 10 நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில உயிராபத்து நிறைந்தவையாக அமைந்துள்ளன. இந்த நோய்களும் ஆபத்துகளும் இலங்கையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு விடுமெனவும் சமரகோன் சுட்டிக்காட்டினார்.  

நாட்டில் நிலவிய வரட்சி மற்றும் உண்ணி நோய் காரணமாக, தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், சந்தையில் தேங்காயின் விலை சுமார் 100 ரூபாய்க்கும் அதிகமாகக் காணப்பட்டது. எனினும் தற்போது இறக்குமதி தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், விலை காய் ஒன்றுக்கு ரூ. 75 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .