2025 ஜூலை 23, புதன்கிழமை

பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக்குழு வியாபார நோக்கில் விஜயம்

Editorial   / 2018 ஜனவரி 18 , மு.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இலங்கை இடையிலான வியாபார பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் அடிப்படையில், ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன, ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் மட்ட நாடாளுமன்றக் குழுவொன்றுடன் இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார்.  

ஐந்து அங்கத்தவர்களைக் கொண்டிருந்த இந்தக்குழுவில், பிரித்தானியாவின் சகல கட்சி நாடாளுமன்றக் குழு, இலங்கைத் தலைவர் ரணில் மெல்கம் ஜயவர்தன, மிச்செல் டொனலன் (நாடாளுமன்ற உறுப்பினர்), கிறஸ் கிறீன் (நாடாளுமன்ற உறுப்பினர்), ஜோன் லமொன்ட் (நாடாளுமன்ற உறுப்பினர்), கிளெமன்ஸி எலனொர் ஹக்கின்ஸ் (தலைவருக்கான நாடாளுமன்றச் செயலாளர்) ஆகியோர் அடங்கியிருந்தனர்.  

இந்தத் தூதுக்குழு, தனது விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொண்டது. இந்தத் தூதுக்குழுவின் விஜயத்தின் பிரதான நோக்கம், இரு நாடுகளுக்கிடையேயும் உறுதியான பொருளாதார, வியாபார மற்றும் கலாசார, கல்விசார் உறவுகளை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.  

மேலும், இந்த விஜயத்தின் போது, முதலீட்டு சபையின் தலைவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஆகியோருடனான சந்திப்புகளும் இடம்பெற்றன. இந்தக்குழுவினருக்கு இலண்டன் பங்குப்பரிவர்த்தனைக் குழு, தொழில்நுட்பம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.  

மேலும், தென் மாகாணத்துக்கு விஜயம் செய்து, அம்மாகாணத்தின் முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோருடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது இக்குழு. யாழ்ப்பாண விஜயத்தின் போது, வட மாகாண ஆளுநருடனான சந்திப்பையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

மேலும், பாதுகாப்புப் படையின் கட்டளைத்தளபதியுடனான சந்திப்பையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். சமயத்தலங்களான கண்டி, தலதா மாளிகை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றுக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தனர்.  

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன, ஐக்கிய இராஜ்ஜியத்தில் இலங்கை பற்றி ஊக்குவிப்புகளை மேற்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார். இதனூடாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உறுதியான உறவுகளை ஏற்படுத்துவது, முக்கியமான பொருளாதார நிலையங்கள், மற்றும் இலங்கைக்கு அனுகூலமளிக்கக்கூடிய பிரதான தூதரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளார்.  

சமூக விடயங்களைப் பொறுத்தமட்டில், சில முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவது மற்றும் சுமூகமான உறவுகளை சகல சமூகங்களுடனும் ஏற்படுத்துவது மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள சகல இலங்கை சமூகத்தாரையும் வெற்றிகரமாக ஒன்றிணைக்கும் வகையிலான நிகழ்வுகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன.  

வெசாக், தீபாவளி, ரமழான் மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் சகல தரப்பினரும் பங்கேற்று, அமரி அவர்களின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். 

பிரித்தானியில் அமைந்துள்ள சுற்றுலா சபையுடன் இணைந்து, சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலமாக, இலங்கை அந்நாட்டின் முதல்தரப் பயண நாடாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. சிறந்த நீண்ட பயண பிரதேசத்துக்கான ‘குடும்ப பயண விருது| இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.  

Inner Temple இன் பொருளாளர் டேவிட் பிட்டவே Q.C க்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இவர் அழைப்புவிடுத்திருந்தார். இதனூடாக நாட்டின் சட்ட கட்டமைப்பை மேம்படுத்த உதவிகளை வழங்கக்கூடியதாக இருக்கும். ஐக்கிய இராஜ்ஜியத்தில் இலங்கைத் தேயிலையின் 150 வருட பூர்த்தியை குறிக்கும் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

2017ஆம் ஆண்டின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் CHOGM 2018 ஆகியவற்றை முன்னெடுப்பது தொடர்பில் வெளி உறவுகள் அமைச்சு மற்றும் பிரித்தானிய மற்றும் பொதுநலவாய அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து திட்டங்கள் வகுக்கப்பட்ட வண்ணமுள்ளன.  

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலுடன் சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .