2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பொருளாதார மீட்சிக்கு பொதுத் துறையிலும் டிஜிட்டல் மயமாக்கல் அவசியம்

ச. சந்திரசேகர்   / 2020 மே 31 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை எதிர்நோக்கியுள்ள தீர்வின்றிய பிரச்சினையை, டிஜிட்டல் பொதுச் சேவைகளை நோக்கி, உறுதியான முறையில் நகர்வதனூடாகத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். குறிப்பாக, கொவிட்-19 தொற்றுப் பரவல் காணப்படும் சூழலில், உயிர்களைப் பாதுகாப்பதுடன், பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாதீட்டு குறைநிரப்பு பெறுமதியை ஈடு செய்வதும், அரசாங்கத்தின் கடன் சுமையைத் குறைப்பதுடன், பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை பயனளிப்பதாக அமைந்திருக்கும் என, ACCA இன் அங்கத்தவரும், KPMG இன் கணக்காய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியுமான சுரேன் ராஜகாரியர் தெரிவித்தார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கத்தால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால், அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவும் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிந்தது. எவ்வாறாயினும், இந்த ஊரடங்குச் சட்டம் அமலாக்கத்தால், பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவுகள் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கு, அரசாங்கத்தால் நாணயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் வங்கியியல் கட்டமைப்பினூடாக, 50 பில்லியன் ரூபாய் பெறுமதியான வியாபாரக் கடன் வசதியை வழங்குவது, தினசரி குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பது போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு, பொதுத் துறையில் டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிப்பது என்பது, பெருமளவு பயனளிப்பதாக அமைந்திருக்கும் என ராஜகாரியர் மேலும் தெரிவித்தார்.

சீனாவில் ஏற்பட்ட முடக்க நிலை காரணமாக, உலகளாவிய ரீதியில் மூலப்பொருள்கள் விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்குச் சில வாரங்கள் மாத்திரம் தேவைப்பட்டிருந்தது என ACCA குறிப்பிட்டுள்ளது.

இந்த இடர்நிலை தொடர்பான காலம், அதன் அளவு தொடர்பில் உறுதியற்ற நிலை காணப்படுகின்றது.

கொவிட்-19 க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது பாரியளவில் உற்பத்தி செய்யப்படும் வரையில், உலகளாவிய ரீதியில் பொருளாதார உறுதியற்ற நிலை தொடரும். உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் வினைதிறனிலும் அரசாங்கங்களால் தமது பொருளாதாரங்களைத் திரள் நிலையில் பேணுவது என்பதில், இது பெருமளவில் தங்கியிருக்கும்.

இலங்கை அரசாங்கத்துக்கு, தொடர்ந்தும் ஊக்குவிப்பு வழங்குவது என்பது கடினமானதாக அமைந்திருக்கும்.

''தீர்வு காணப்பட முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. பொருளாதாரத்தை மீட்சிக்கு உட்படுத்த, அரசாங்கம் ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். ஆனாலும், வரி வருமானங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதால், குறைநிரப்பு நிதியிடுவது என்பது, சவாலான காரியமாக அமைந்திருக்கும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது. இது, மொத்த தேசிய உற்பத்தியின் 13.3% ஆகும். இதில், வரி வருமானம் 90% ஆகக் காணப்பட்டதுடன், இதில் பெரும் பகுதி, பெறுமதி சேர் வரி மூலமாகக் கிடைத்திருந்தது.

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னர், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாகப் பாதிப்படைந்திருந்த பொருளாதாரத்தை மீட்பதற்காக, வரிச் சலுகைகளை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த வரிச் சலுகைகள் காரணமாக, 2020இன் மொத்த தேசிய உற்பத்தியில் இரண்டு சதவீத வீழ்ச்சி பதிவாகியிருக்கும்.

2020ஆம் ஆண்டு என்பது, நுகர்வு அடிப்படையிலான பொருளாதார மீட்சியைப் பெற்றுக் கொடுக்கும் என அரசாங்கம் நம்பியிருந்தது. இதன் காரணமாக, வருமான இழப்பு ஈடு செய்யப்படும் எனவும் கருதியது. ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக இந்தத் தொற்றுப் பரவல் எம்மைத் தாக்கியுள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியிலும், அதைத் தொடர்ந்தும், குறைவாக இடம்பெறும் பொருளாதார, வியாபாரச் செயற்பாடுகள் காரணமாக, வரி மூலமான வருமானங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். பெறுமதி சேர் வரி, முத்திரை வரி, இதர வரிகள் போன்றவற்றைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சலுகைக் காலங்களை அறிவித்துள்ளது. குறுங்கால அடிப்படையில், அரசாங்கத்தின் வருமானத்தில் இதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும், அரசாங்கம் தொடர்ந்தும் செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக, பொதுச் சுகாதார சேவைகளிலும் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் நிதி  உதவிகளை வழங்க வேண்டிய நிலையிலுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு உலக வங்கியால் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு 128 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனாலும், 2022ஆம் ஆண்டு வரை ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் கடனை, இலங்கை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. உலகளாவிய ரீதியில், திரள்வு நிலைமைகள் இறுக்கமடைவதன் காரணமாக, மேலும் உள்நாட்டுக் கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தும். 2019ஆம் ஆண்டு ஜுன் மாத நிறைவில், இலங்கையின் 13 ட்ரில்லியன் ரூபாய் கடன் தொகையின் அரைப்பங்கு, உள்நாட்டுக் கடன் பெறுகைகளாக அமைந்திருந்தன.

இந்தக் கொவிட்-19 தொற்று, உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் என்பதால், அரசாங்கம் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது எனும் நிலைக்கு அப்பால் சென்று, சிந்திக்க வேண்டியுள்ளது என ராஜகாரியர் கருதுகின்றார்.

உலகளாவிய ரீதியில், பழக்கவழக்கம், நுகர்வு முறைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விற்பனையாளர்கள் பலர், தமது வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, e-வணிக கட்டமைப்புகளைப் பயன்படுத்த முன்வந்துள்ளனர். சுகாதார சேவை வழங்குநர்களும் முன்னொரு போதுமில்லாத வகையில், ஒன்லைன் ஊடாகத் தமது சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

பல நிறுவனங்கள் தமது விற்பனைகள், கொள்வனவுகள், கொடுப்பனவுகள், இலிகித செயற்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் மாற்றிய வண்ணமுள்ளன. உள்நாட்டில், சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்களால், கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி நிதி அறிக்கைகளை, ஒன்லைன் ஊடாக மேற்கொண்டிருந்தன. இதனூடாக, முதலீட்டாளர்களுக்கு உரிய காலப்பகுதியில் தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்திருந்தன. சில கணக்காய்வாளர்கள், இலத்திரனியல் முறையில் கணக்காய்வுச் செயற்பாடுகளையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் மெதுவாக, டிஜிட்டல் அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு மாற ஆரம்பித்துள்ளது. ஆனாலும், அரசாங்கம் இதற்குத் தலைமைத்துவமளித்தால் மாத்திரமே, இதை முழுமையாக அமலாக்கக் கூடியதாக இருக்கும் என ராஜகாரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, பெருமளவான வங்கிகளும் விற்பனையாளர்களும் டிஜிட்டல் ஒன்லைன் சேவைகளை வழங்குகின்றன. ஆனாலும், பெருமளவான மக்கள் இணையத்தில் இணைப்பைக் கொண்டிருப்பதில்லை என்பதுடன், Wi-Fi சேவைகளின் செலவு, தரம் போன்றனவும் சாதகமானதாக இல்லை.

நுகர்வை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய ஒரு நடவடிக்கையாக, e-வணிக உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது அமைந்துள்ளது. அத்துடன், சில நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, செலவுக் குறைப்பு, கொடுப்பனவுகளைக் குறைத்தல் போன்றவற்றை அமல்படுத்தி, பொருளாதாரச் செயற்பாட்டின் சுழற்சியை மீறாமல் இருப்பதை உறுதி செய்வதும் கட்டாயமாகும்.

இதன் பின்னர், வியாபாரங்கள் புரள்வையும் இலாபத்தையும் ஈட்ட முடியும் என்பதுடன், தமது ஊழியர்களைத் தக்க வைத்து, வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களையும் மீளச் செலுத்தக் கூடியதாக இருக்கும். அத்துடன், தேசத்துக்கும் வரிச் செலுத்துதலின் ஊடாகப் பங்களிப்பு வழங்க முடியும்.

இந்தச் செயற்பாடுகளுக்கு, டிஜிட்டல் முறையில் இயங்கும் பொதுச் சேவை, வினைதிறன், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை அதிகரிக்கக் கூடியதாகவும் வியாபார நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கூடியதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

வரி செலுத்தல், வியாபார ஆவணப்படுத்தல், அங்கிகாரமளித்தல் போன்றன, கணினி மயப்படுத்தப்பட்டு, தன்னியக்கமாக இயங்கச் செய்யப்பட வேண்டும். ஏனைய, அரச சேவைகளையும் ஒன்லைனில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி காணப்பட வேண்டும். இதனால், முதலீட்டாளர்கள், வியாபாரங்களுக்கு இந்த உறுதியற்ற காலப்பகுதியில், தமக்கு அவசியமான நம்பிக்கையைக் கட்டியெழுப்பிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மொத்தத்தில், அரச கட்டமைப்புகளில் காணப்படும் வினைதிறனற்ற செயற்பாடுகள், ஊழல்களை நீக்கி, தனியார் நிறுவனங்களுக்குச் சுபீட்சமாக இயங்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு, டிஜிட்டல் மயமாக்கம் என்பது, பக்கபலமாக அமைந்திருக்கும் எனச் சுரேன் ராஜகாரியர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .