2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வாகனங்கள் இறக்குமதி மீண்டும் தடைப்படுமா?

S.Sekar   / 2025 ஜூலை 28 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

இந்த ஆண்டின் முற்பகுதியில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அண்மைய நாட்களில் பலரின் பேசு பொருளாக அமைந்திருக்கும் ஒரு விடயம், நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணி இருப்பு குறைவடைந்து செல்வதால், அல்லது இந்த ஆண்டுக்காக வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்ட தொகையின் பெருமளவு பகுதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டு நிலையில், மீண்டும் வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்படும் அல்லது அனுமதி மறுக்கப்படும் என்றவாறான ஐயப்பாட்டுடனான கருத்துகள் நிலவுகின்றதை அவதானிக்க முடிகிறது.

உண்மையில் வாகன இறக்குமதி என்பது, நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணியுடன் நேரடியாக தொடர்புபட்டதல்ல என்பதை நாம் ஏற்கனவே பல தடவைகள் விளக்கியுள்ளோம். அதாவது, வாகன இறக்குமதி என்பதும், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் மீதான செலவைப் போன்ற ஒரு விடயமாகும். மேலும் குறிப்பிடுவதானால், நாட்டில் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணி சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருக்கும் நிலையில், ஒரு வருடத்துக்கான நாட்டின் மொத்த இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணியின் அளவு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாகும். எனவே, இந்த மொத்த இறக்குமதியையும் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணியைக் கொண்டு நிவர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.

மாறாக, நாட்டின் ஏற்றுமதியினூடாக கிடைக்கும் அந்நியச் செலாவணி, நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணி போன்றவற்றிலிருந்து இந்த இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி பெறப்படுகிறது என எளிமையாக கூறலாம்.

வாகன இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியை நாட்டின் வங்கிக் கட்டமைப்புகள் வழங்குகின்றன. வாகன இறக்குமதியை தடை செய்தால், வங்கிகளில் சேரும் அந்நியச் செலாவணியை அவை தம்வசம் வெறுமனே வைத்திருக்கப் போவதில்லை. மாறாக, வேறேதும் இறக்குமதிக்கான கேள்வி எழும் போது, அவற்றை வங்கிகள் வழங்கும். அந்த சுழற்சி நடைபெற்றால் தான் வங்கிக் கட்டமைப்பு இலாபகரமானதாக இயங்கும். கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, அவற்றுக்கு பதிலாக மாற்று வழிமுறைகளை நாடுவது வழமை. இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகையில், உண்டியல் முறைகள் போன்ற சட்டபூர்வமற்ற முறைகளை மக்கள் நாடுகின்றனர். அதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு இழப்பு ஏற்படுகிறது எனக் கூறலாம்.

சரி, கொழும்பு நகரின் பிரதான வீதிகளை எடுத்துக் கொண்டால், அண்மையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அதிகம் காணக்கிடைக்கிறது. இலங்கை மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தினால் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் இன்னமும் வழங்க ஆரம்பிக்கப்படாத நிலையில், புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வித்தியாசமாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு வர்ணங்களில், வடிவங்களில் இலக்கத்தகடுகள் அச்சிடப்பட்டு பயணிப்பதனூடாக அது புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பதை அனுமானித்துக் கொள்ள முடிகிறது. அதுபோலவே மின் வாகனங்களின் பாவனையும் வீதிகளில் அதிகரித்துள்ளன. குறிப்பாக மின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீன நாட்டு தயாரிப்பாக BYD ரக வாகனங்களையும் அதிகம் அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் ஜுன் மாதம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கைகள் குறித்த தரவுகள் அண்மையில் மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தன. இதில் ஏப்ரல், மே மாதங்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஜுன் மாதத்தில் இலங்கையில் மொத்தமாக 22,340 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மே மாதத்தில் இந்தப் பெறுமதி 18,463 ஆக காணப்பட்டது. ஜுன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த புதிய வாகனங்களில் சுமார் 60 சதவீதமானவை சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களாக அமைந்துள்ளன. அதில், சுமார் 2,593 ஆனவை மின் மோட்டார் சைக்கிள்களாக அமைந்துள்ளன.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் அதிகம் காணக்கிடைக்கும் BYD ரக வாகனங்கள் 1,254 ஜுன் மாதத்தில் பதிவு செய்யப்ட்டுள்ளன. இதில், Dolphin எனப்படும் BYD ரக வாகனத் தெரிவுகளில் சிறிய ரக வாகனங்கள் 154, Atto எனும் தெரிவு வாகனங்கள் 501, Sealion தெரிவில் 502 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதிலிருந்து, பாவனையாளர்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மீது அதிகம் நாட்டம் காண்பிக்க ஆரம்பித்துள்ளமை புலப்படுகிறது. இந்த நிலையை ஊக்குவிக்கும் வகையில், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பயனளிப்பதாக அமையும்.

மோட்டார் கார்களை எடுத்துக் கொண்டால், ரீகண்டிஷன் செய்யப்பட்ட ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக கார்களான வெகன்-ஆர் ரக கார்கள் ஜுன் மாதத்தில் அதிகளவு பதிவு செய்யப்பட்டுள்ளன. 551 வாகனங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாக அமைந்துள்ளன. புத்தம் புதிய நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 468 மாத்திரமே. எனவே, ஆடம்பர சொகுசு வாகனங்களின் பதிவு என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஜுன் மாதத்தில் பதிவாகியிருந்தது.

இவ்வாறிருக்க, இலங்கை மத்திய வங்கியினால் வாகனங்கள் மீது வழங்கப்படும் கடன்கள் தொடர்பில் கடந்த வாரம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, வாகனமொன்றை கொள்வனவு செய்கையில் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய தொகையின் உச்ச வரம்பு தொடர்பில் இந்த அறிவித்தல் அமைந்திருந்தது.

ஜுன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை எடுத்துக் கொண்டால், மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக கடனாக பெற்றுக் கொண்ட தொகை 54 சதவீதமாகவும், பாவனையாளர்கள் தாம் செலுத்திய தொகை 46 சதவீதமாகவும் அமைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இந்த புதிய அறிவித்தலின் பிரகாரம், முச்சக்கர வண்டி கொள்வனவை ஊக்குவிப்பதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.

அதாவது, கார்கள் போன்ற வாகனங்கள் கொள்வனவுக்கு வழங்கப்பட்டிருந்த கடன் எல்லை வரம்பு வாகனத்தின் மொத்தப் பெறுமதியின் 60 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், முச்சக்கர வண்டிகளுக்கு 50சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்ட கடன் எல்லை வரம்பு 25 சதவீதமாக அமைந்திருந்தது. வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் முன்னர், அதாவது 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் முச்சக்கர வண்டி ஒன்றின் விலை சுமார் 6 – 7 இலட்சம் ரூபாயாக காணப்பட்ட நிலையில், தற்போது முச்சக்கர வண்டி ஒன்றின் விலை 2 மில்லியன் ரூபாயை விட அதிகமானதாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதும், வாகன இறக்குமதி இடைநிறுத்தப்படாது எனும் ஒரு கருத்தையே மத்திய வங்கியின் ஆளுனர் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் சூழல் காணப்படுகிறது. வாகன இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வரி வருமானம், நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமானது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

அதனை ஊக்குவிக்கும் வகையில், இந்த வாகனப் பெறுமதி மீதான கடன் எல்லை பெறுமதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. வாகனங்கள் தொடர்ந்து வரும்!.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .