2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடுகள் 1938 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'வவுனியா மாவட்டத்தில் 10,209 தமிழ் மக்களுக்கு வீடுகள் தேவையென கேரிய போதிலும் 1938 பேருக்கு மட்டும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன' என வவுனியா மாவட்ட மீள்குடியேறியோருக்கான நலன்பேனும் அமைப்பு இன்று (3) தெரிவித்துள்ளது.

இவ் அமைப்பின் சார்பில் அதன்; செயலாளர் மா.றேணிதாஸ் மற்றும் பொருளாளர் நா.நடராசா ஆகியோர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வவுனியா மாவட்டத்தில் இந்திய வீட்டுத் திட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் பங்கீடுகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பாக வவுனியா மாவட்ட மீள்குயேறியோர் நலன் பேணும் அமைப்பினராகிய நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

இவ் வீட்டுத்திட்ட தெரிவு முறையில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக யுத்த பாதிப்புக்குள்ளான பல தமிழ் குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுக்கான ஒரு நீதியினையே நாம் கோருகின்றோம்.

ஆனால் அதைவிடுத்து சிலர் இதனை தமது சுயநல இருப்புக்காகவும் அரசியல் இலாபத்திற்காகவும் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகிறார்கள். இந்நிலையிலேயே பங்கீடுகள் இவ்வாறு அமையப்பெற்றுள்ளது. இது சரியா என்பதன வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத் திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் வீட்டுத் திட்ட தெரிவில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் அதிகார செல்வாக்கு உள்ளதாக கூட்டமைப்பும் அவ்வாறு இல்லை நியாயாமான முறையில் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பும் மாறி மாறி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் 2218 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை என விண்ணப்பித்த போதும் 304 குடும்பங்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டன. இது 13.70 வீதமாகும். இதேபோல் 914 முஸ்லிம் மக்கள் வீடு தேவை என விண்ணப்பித்த நிலையில் 1169 வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இது 127.17 வீதமாகும். இங்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கயை விட மேலதிகமாக வீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டன?

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் சார்பாக 2051 குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த நிலையில் 504 பேருக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 24.60 வீதமாகும். அதேபோன்று வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவில், தமிழ் குடும்பங்கள் 38 விண்ணப்பித்த நிலையில் 34 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளன. இது 89.40 வீதமாகும். அதே பகுதியில் 773 சிங்கள குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 545 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளன. இது 70.50 வீதமாகும்.

வவுனியா நகர பிரதேச செயலாளர் பிரிவில் 5902 தமிழ் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 1096 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளன. இது 18.60 வீதமாகும். இதே பிரிவில் 569 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தினை கோரிய போதும் 465 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டன. இது 82.7 வீதமாகும்.

இவ்வாறு மூன்று கட்டங்களிலும் பகிரப்பட்டதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட ரீதியில் 10,209 தமிழ் மக்கள் முழுமையாக வீட்டினை இழந்து அதனை கோரியுள்ள போது 1938 பேருக்கு மட்டும் அவ் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 18.9 வீதமாகும். 773 சிங்களக் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தைக் கோரிய போதும் 545 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 70.5 வீதமாகும். இவ்வாறு இருக்கும் நிலையில் 1483 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தை கோரிய போது 1634 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 110 வீதமாகும்.

இன விகிதாசார அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கூடிய சனத்தொகையை கொண்டவர்களாகவும் கூடிய வீட்டுத் திட்டங்களை கோரியவர்களாகவும் தமிழர்கள் இருக்கும் போதும் போது இரண்டாம் நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் கோரியதை விட மேலதிகமாக வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு  திடீர் என மேலதிக குடும்பங்கள் எங்கிருந்து வந்தன? பதில் சொல்லப் போவது யார்? என்பதே பாதிப்படைந்த மக்களின் கேள்வியாகவுள்ளதாக உள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .