2025 ஜூலை 23, புதன்கிழமை

திருக்கேதிஸ்வர மனித எலும்புக்கூடுகள் மீட்பு பணியை 28ஆம் திகதி தொடர உத்தரவு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியிலுள்ள மனித புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகளை எதிர்வரும் 28ஆம் திகதி மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியிலிருந்து இதுவரை 10இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

திருக்கேதிஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவை மீட்கப்பட்டன.

இதன்போது 10இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதியிலிருந்து எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருவதினால் சட்ட வைத்திய நிபுணரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் நீதவானின் உத்தரவிற்கமைவாக அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் வைத்தியரட்ணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாலை அவர் புதைகுழியுள்ள இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

மனித எலும்புக்கூடுகளை பார்வையிட்ட சட்ட வைத்திய நிபுணர், குறித்த மனித எச்சங்கள் வீதிக்கரைகளில் இருப்பதினால் வீதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளவும் அருகில் உள்ள காடுகளை அகற்றி பணிகளை தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வீதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிக்கு உத்தரவிட்டதோடு குறித்த பகுதிகளில் உள்ள காடுகளை துப்பரவு செய்ய போதிய ஊழியர்களை தயார்படுத்துமாறும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜயசேனக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் குறித்த மனித புதைகுழிகள் காணப்படுகின்ற இடத்தில் அகழ்வுகளை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதோடு குறித்த பகுதிக்கு உரிய பாதுகாப்புக்களை வழங்குமாறும் மனித எச்சங்கள் அகழும் வரை திடீரென ஏற்படக்கூடிய மழை, வெயில் ஆகியவற்றில் இருந்து அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த, வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .