2025 ஜூலை 30, புதன்கிழமை

'முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களில் 20 சதவீதமானோருக்கு அடையாள அட்டையில்லை'

Super User   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களில் 20 சதவீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டிருக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என். வேதநாயகன் தெரிவித்தார்.

'கபே' அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் கள நிலவரங்களை ஆராயும் ஊடகவியலாளர்கள் குழு முல்லைத்தீவு மாவட்ட நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இன்று நேற்று சனிக்கிழமை அங்கு சென்றது.

இதன்போது மாவட்ட கள நிலவரங்கள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்திய மாவட்டச் செயலாளர் வேதநாயகன் மேலும் தெரிவிக்கையில்,

"தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக இடம்பெயர் சேவைகளை நடத்தி உதவி வழங்கிக் கொண்டிருக்கும் 'கபே' நிறுவனத்தின் சேவை பாராட்டுக்குரியது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அடையாள அட்டைகள் இல்லாத ஏனையோருக்கும் கபே நிறுவனத்தின் உதவியுடன் அவற்றை விநியோகித்து விடலாம் என்று நான் நம்புகின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாந்தை கிழக்கு, துணுக்காய், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 'கபே' நிறுவனத்தின் அனுசரணையோடு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்கான இந்த இடம்பெயர் சேவை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் தொடக்கம் தற்போது வரை சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தேசிய ஆளடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு 'கபே' நிறுவனம் உதவியுள்ளது" என்றார்.

இதேவேளை, கபே நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அலுவலகம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண தேர்தலைக் கண்காணிக்கும் முகமாக இந்த அலுவலகம் முல்லைத்தீவு கடற்கரை வீதியில் அமையப் பெற்றுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .