2025 ஜூலை 16, புதன்கிழமை

மலசலகூடம் அமைப்பதில் ரூ.27 இலட்சம் மோசடி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் யுனிசெப் நிதியுதவியில் மலசலகூடங்கள் அமைப்பதில் 27 இலட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷக்த் பதியுதீன் ஆகியோரின் இணைத்தலைமையில் கரைத்துரைப்பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03)இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, மலசலகூடங்கள் அமைப்பதில் மோசடிகள் இடம்பெற்றது என்பதை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறினார்.

அதனை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ரி.குருபரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மோசடிகள் இடம்பெற்றமை தொடர்பில் கணக்காய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யுனிசெவ் நிறுவனத்தால் ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் அபிவிருத்திக் கிராமத்திலுள்ள 151 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைப்பதற்கு தலா 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மலசலகூடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கான பணிகள் ஒப்பந்தகார நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்நிறுவனம், ஒரு மலசலகூடத்திற்கு 3 உழவு இயந்திரங்கள் மண் தேவையான நிலையில் 2 உழவு இயந்திர மணலை மாத்திரம் கொண்டு வேலை தொடங்கியுள்ளது.

அத்துடன், ஒரு உழவு இயந்திர மண் 2,300 ரூபாய் ஆன தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போதும், அந்நிறுவனம் ஒரு உழவு இயந்திர மண் 4,450 ரூபாய் என்ற தொகைக்கு கணக்குக் காட்டியுள்ளது.

மேலும், மலசலகூடம் அமைப்பதற்கான கம்பிகள், இதர பொருட்களை பயனாளிகளிடம் காசு வாங்கிக்கொண்டு செய்துள்ளது.
 
அத்துடன், தரமற்ற விதத்தில் மலசலகூடங்களை அமைத்தும் கொடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் மாவட்டச் செயலாளர் கணக்காய்வுக் குழுவின் மூலம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அந்த மோசடி நடவடிக்கையில், அரச அலுவலர்களுக்கும் தொடர்புகள் இருக்குமா என்ற ரீதியிலும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X