2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் 350 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவு

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் 1,250 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 350 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் என்.சுதாகரன் வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே சுதாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மழை வீழ்ச்சியில்லாத காரணத்தினால் கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரட்சியான நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களின் நீர்மட்டமானது வேகமாகக் குறைவடைந்துள்ளதுடன், சில குளங்கள் நீர் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்தவகையில், இரணைமடுக்குளத்தில் 11 அடி 3 அங்குலமும், கல்மடுக் குளத்தில் 2 அடி 1 அங்குலமும், அக்காரயன் குளத்தில் 2 அடி 7 அங்குலமும், கனகாம்பிகைக்குளத்தில் 1 அடியும், புதுமுறிப்புக் குளத்தில் 4 அடியும், குடமுறுட்டிக்குளத்தில் 4 அடியும், வன்னேரிக்குளத்தில் 3 அடி 4 அங்குலமும் தற்போது நீர் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனைவிட, கரியாவை நாகபடுவான், பிரமந்தனாறு ஆகிய குளங்கள் நீர் இன்றி வற்றிய நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், குளங்களை நம்பி மேற்கொள்ளப்படும் சிறுபோக நெற்செய்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 800 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அந்த நெற்செய்கையின் பயன் முழுமையாகக் கிடைக்கப்பெறும் நன நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பூநகரிப் பிரதேசத்தின் நிலத்தடி நீர் வளம் குன்றி வரும் நிலையில் அப்பிரதேசத்திலுள்ள குளங்களின் நீரினைச் சிக்கனமாக பயன்படுத்தி நிலத்தடி நீரினைப் பாதுகாக்கும் படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X