2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை தலைமையிலான 40 புலிகள் எங்கே?

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


முல்லைத்தீவில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையிலான சுமார் 40 விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத்தளபதி யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்புவின் மனைவி ராயப்பு மிறோனியா, மடு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

மடு, பெரிய பண்டிவிருச்சானை வதிவிடமாகக் கொண்டுள்ள ராயப்பு மிறோனியா இது தொடர்பாக மேலும் கூறியதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக கடமையாற்றிய எனது கணவரான யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு, கடந்த 18.05.2009 அன்று இராணுவத்திடம் சரணடைந்தார்.

அவர் இராணுவத்திடம் சரணடையும் வரை நான் அவருடன் இருந்தேன். முல்லைத்தீவில் இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கினர். பொதுமக்களுடன் வருகை தந்துள்ள புலி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இராணுவத்திடம் சரணடையுமாறும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியான எனது கணவர் உட்பட சுமார் 40 புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

அவர்களை இராணுவத்தினர் பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்றார்கள். எனது கணவர் சரணடையும் போது அவருக்கு 43 வயதாகும். எனது கணவர் சுமார் 23 வருடங்களாக புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். 1983ஆம் ஆண்டு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட நிலையில் 1998ஆம் ஆண்டு என்னை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்ததோடு அகதி முகாம்களுக்குச் சென்று தேடியும் பார்த்தேன்.

ஆனால் அவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது இரவு நேரத்தில் பெரிய பண்டிவிருச்சானில் உள்ள எனது வீட்டிற்கு மது போதையில் வரும் இனந்தெரியாத நபர்கள் எனது கணவர் தொடர்பாக விசாரிக்கின்றனர்.

எங்களுடைய வீட்டிற்கு வருபவர்களையும் விசாரிக்கின்றனர். நாங்கள் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது எங்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டியின் சாரதிகளை அழைத்து விசாரணை செய்கின்றனர். இதனால் நாங்கள் வெளியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். நானும் எனது மூன்று பிள்ளைகளுமே வாழ்ந்து வருகின்றோம். பிள்ளைகள் கல்வி கற்று வரும் நிலையில் நாங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளோம்.

அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவர் உட்பட 40 புலி உறுப்பினர்களும் உயிருடன் எங்காவது இருக்கிறார்கள் என்று நான் நம்புகின்றேன். எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உதவிகளும் வேண்டாம். எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள். அல்லது அவரை காட்டுங்கள். தினம் தினம் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றோம்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படும் போது ஏன் எனது கணவரையும் அவருடன்; சரணடைந்த உறுப்பினர்களை விடுதலை செய்ய முடியாது. அவர்கள் இருக்கிறார்கள் என்றால் இருக்கிறார்கள் என கூறுங்கள்.இல்லாவிட்டால் இல்லை என்று கூறுங்கள்.

விசாரணை விசாரணை என எத்தனை விசாரணைகளை மேற்கொள்ளுகின்றீர்கள். படிவங்களை நிரப்பிக் கேட்கின்றீர்கள். அவர் உயிரோடு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம். அவரை விடுதலை செய்ய முயற்சி எடுங்கள்' என மிறோனியா, கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, 'இவ்விடயம் தொடர்பாக ஆணைக்குழு கவனம் செலுத்தும். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு குழுவை அனுப்புவோம். அந்த நேரம் நீங்கள் அவர்களின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X