2025 ஜூலை 23, புதன்கிழமை

ஓலைத்தொடுவாயில் 510 ஏக்கர் காணி தனி நபரால் அபகரிப்பு: உப தலைவர்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவில் 510 ஏக்கர் காணி தனி நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப-தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம்  தொடர்பாக வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார், ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட உவரி, தாழங்காடு, கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி வகையிலேயே 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்பட்ட இந்த காணியானது போலி ஆவணங்கள் ஊடாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த 510 ஏக்கர் காணியில் தமது காணிகளும் உள்ளடங்குவதாக உரிமை கோரி சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு வந்து என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் காணியை சட்டவிரோதமாக விற்பனை செய்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த குறித்த நபரையும்,அதனை வாங்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரையும் அழைத்து பேச்சு வார்த்தையினை மேற்கொண்டோம்.

இதனைத்தொடர்ந்து  பாதிக்கப்பட்டவர்களையும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த விவகாரம் தொடர்பில் சட்டத்தரணியூடாக ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.இதன் போது ஓய்வு பெற்ற வடமாகாண காணி ஆணையாளர் கே.குருநாதன் முன்னிலையில் பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த காணி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மன்னார் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.எனினும்,காணிகளை பறிகொடுத்த குறித்த கிராம மக்கள் மத்தியில் அச்சமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்பட்ட குறித்த 510 ஏக்கர் காணியில் குறித்த நபர் எந்தவிதமான  வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்று  மன்னார் பிரதேச சபை தடை விதித்துள்ளது.என மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .