2025 ஜூலை 23, புதன்கிழமை

நீரின்மையால் 600 ஏக்கர் நெற்செய்கை அழிவு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், நாகதாழ்வு மீள்குடியேற்ற விவசாய கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்பயிர்கள் நீர் இல்லாமையினால் தற்போது அழிவடைந்து வருவதாக நாகதாழ்வு விவசாய அமைப்பின் தலைவர் வி.விஜயன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், 'நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக குறித்த கிராமத்தில் வசித்து வந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்று கடந்த 2010ஆம் ஆண்டு மீண்டும் அக்கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்.

அம்மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்;போது குறித்த கிராமத்தில் 110 குடும்பங்கள் மாத்திரமே உள்ளன. இக்குடும்பங்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குறித்த நாகதாழ்வு கிராமத்தில் 1200 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் கட்டுக்கரை குளத்தில் இருந்து உரிய முறையில் எமது விவசாய செய்கைக்கான நீர் வழங்கப்படவில்லை.இதனால் விவசாய செய்கைகள் ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டன' என்றார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது 5 ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய செய்கையினை மேற்கொண்டுள்ளவர்களுக்கு நீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாகதாழ்வு கிராமத்தில் உள்ள நெற்பயிர்ச் செய்கைகளுக்கு இதுவரை நீர் வழங்கப்படவிலலை. இதனால் தற்போது வரை 600 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை கதிர்விட்டதை அடுத்து அழிவடைந்துள்ளன.

மிகுதி 600 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை மாத்திரமே மிஞ்சியுள்ளது. அவை தற்போது கதிர்விட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றை காப்பாற்ற நீர் இன்றி விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்' என்று அவர் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக முருங்கன் விவசாய திணைக்களத்திடம் எடுத்துக்கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. கட்டுக்கரை குளத்தில் இருந்து திறந்து விடப்படுகின்ற நீரை இடையில் உள்ளவர்கள் இடைமறித்து விவசாய நடவடி;கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

கட்டுக்கரை குள நிர்வாகத்தில் உள்ள சிலரும் குறித்த நீரை இடை மறித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே தற்போது எஞ்சியுள்ள 600 ஏக்கர் நெற்பயிர்களும் கதிர் விட்டுள்ளமையினால் அவற்றிற்கு உடனடியாக நீர் தேவைப்படுகின்றது. எனவே உடனடியாக குறித்த நெற்பயிர்ச் செய்கைகளுக்கான நீரை வளங்க உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .