2025 ஜூலை 16, புதன்கிழமை

'அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் விதத்தில் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

"காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் தொடர்பில், உரிய பதிலை வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் தவறுமானால், அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் விதத்தில் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்" என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம், 56ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்றுக் கருத்துத் தெரிவித்த போது,

"நாங்கள், எங்களுடைய பிள்ளைகளையும் உறவுகளையும், வேறு எங்கும் தொலைத்துவிட்டோ அல்லது வேறு நாட்டுப் படைகளிடம் கையளித்து விட்டோ, இந்த அரசாங்கத்தைக் கேட்கவில்லை. எங்களுடைய உறவுகளை, எங்களது பிள்ளைகளை, இலங்கை அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக, இலங்கை இராணுவத்திடம் கையளித்திருந்தோம்.

"ஆனால், அவர்கள் தொடர்பில் இன்று எட்டு வருடங்களுக்கு மேலாகியும், எந்தப் பதிலையும் இந்த இராணுவமோ அல்லது அரசாங்கமோ வழங்கவில்லை.

"நாங்கள் கண் முன்னே கையளித்த எமது உறவுகளை, அவர்கள் தொடர்பான பதிலைத்தான் கேட்கின்றோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். மறைமுகத் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்கின்றோம்.

"எங்களது உறவுகள் தொடர்பில் இந்த அரசாங்கம், உரிய பதிலை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாங்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டமானது, 56 நாட்களைக் கடந்துள்ளபோதும், எங்களது போராட்டத்தின் கோரிக்கைக்கு, நல்லாட்சி அரசாங்கம் செவிசாய்ப்பதாக அல்லது உரிய பதிலை வழங்குவதாக இல்லை.

"எனவே, இனியும் இவ்வாறு நாட்களை நீள விடுவது என்பது பொருத்தமற்றதொன்று. நாங்கள் அடுத்துவருகின்ற நாட்களில், இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடிகளைக் கொடுக்கின்ற விதத்தில், எமது போராட்ட வடிவங்களை மாற்றி, எமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்" என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X