2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

2018 இல் புதிய கல்வி முறை அறிமுகம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்

“20க்கும் மேற்பட்ட புதிய கல்விப் பிரிவுகளை 2018 இல், பாடசாலைகளிலே அறிமுகப்படுத்தி, தொழில் முறை ரீதியான தொழில்நுட்ப ரீதியான கல்வி வாய்ப்புகள் பாடசாலைகளிலேயே கிடைப்பது உறுதி செய்யப்படவுள்ளது” என, இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய (மத்திய கல்லூரி) தேசியப் பாடசாலைக்கு 3 மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சுமார் 42 மில்லியன் ரூபாய் செலவில் 18 வகுப்பறைகளைக்கொண்ட மூன்று மாடிக்கட்டடமும் 10 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதிகளை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு, மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,  

“மனித வாழ்க்கை அதனோடு இணைந்த சமூகம், தேவைகளால் நிறைந்து காணப்படுகின்றது. பாடசாலைகளும் விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களும் பல்வேறு தேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.  

கல்வி வளத்தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அரசியல் தலைவர்களாகிய நாங்கள் இருக்கின்றோம். உங்களுடைய தேவைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் என்னிடம் பலதடவைகள் பேசியிருக்கிறார்.  

இன்று (சனிக்கிழமை) அத்திவாரம் இடப்படுகிற கட்டடங்கள், 2018 ஆம் ஆண்டிலே நிறைவுபெறும். இது புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக இருக்கும் என நம்புகின்றேன்.  

பாடசாலைகளை விட்டு வெளியேறுகின்ற இலட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்ற நிலை காணப்படுகின்றது. எனவே, 2018 இல் 20க்கும் மேற்பட்ட புதிய பிரிவுகளை பாடசாலைகளிலேயே அறிமுகப்படுத்தி தொழில் முறை ரீதியான தொழில்நுட்பரீதியான கல்வி வாய்ப்புகள் பாடசாலைகளில் கிடைப்பது உறுதி செய்யப்பட இருக்கிறது” என்றார். 

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மாகாணக் கல்விப்பணிப்பாளர் உதயகுமார், வலயக் கல்விப்பணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .