2025 ஜூலை 16, புதன்கிழமை

'உரிமைகள் சமனாக வழங்கும்போதே இண நல்லிணக்கம் ஏற்படும்'

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் ஆகிய பகுதிகளில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள 617 ஏக்கர் காணியினை விடுவிக்காவிடின் முல்லைத்தீவு மாவட்டத்தினை முடக்கும் வகையில் போராட்டத்தில் மக்கள் ஈடுபடவுள்ளனர்” என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வட்டுவாகலில் காணியினை விடுவிக்கக் கோரி புதன்கிழமை (19) நடைபெறும் மக்கள் போராட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது, “மக்களின் காணிகளை அரசியல் கட்டமைப்புக்கு முரணாக வேலிகளை அமைத்து கடற்படையினர் காணிகளை பலப்படுத்தி வருகின்றனர். மக்களின் காணிகளை கடற்படையினர் கையளிக்க வேண்டும்.

மக்களின் காணிகளை கையளிக்காது ஏமாற்றுகின்ற கடற்படையினருக்கு நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற அரசாங்கமும் தனது ஆதரவினை நல்கி வருகின்றது.

இன நல்லிணக்கம் என்பது உரிமைகள் சமனாக வழங்கப்படும் போதே ஏற்படும். ஆனால், தமிழர்களின் பூர்வீக நிலங்களில் படைகள் நிலைகொண்டுள்ள போது நல்லிணக்கம் ஏற்படாது. தமிழர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து உடனடியாக படைகள் வெளியேற வேண்டும்.

வட்டுவாகல் என்பது நந்திக்கடலுடன் இணைந்து பெருங்கடலுடன் தொடர்புபட்டது. இலங்கைத் தீவிலே இறால் பெருக்கம் மிகுந்த பகுதியாக நந்திக்கடல் வட்டுவாகல் பகுதிகள் விளங்குகின்றன. தமது கடலில் தமிழர்கள் மீன் இறால் பிடிக்க முடியாது. கடலுக்குரிய பாரம்பரிய விழாக்கள் கூட நடாத்த முடியாத நிலையில் வட்டுவாகலின் ஒருபகுதியில் கடற்படையினரும் மறுபகுதியில் இராணுவத்தினரும் நிலைகொண்டு மீன்பிடியினைத் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதிகளில் இருந்து வெளியேறி அரசாங்க காணிகளில் முகாம் அமைப்பதில் பிரச்சனைகள் இல்லை. ஆனால் வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். நாளை தொடங்கும் போராட்டம் அடையாள கவனயீர்ப்புப் போராட்டமாக மூன்று நாட்கள் நடைபெறும். பதினான்கு நாட்களில் கடற்படையினர் மக்களின் காணிகளை கையளிக்காது விட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தினை முடக்கும் வகையில் வட்டுவாகலில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X