Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இலங்கை அரசாங்கமானது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையே மேற்கொண்டு வருகின்றது. நிலப்பறிப்பு, குடிப்பரம்பல் மாற்றம், மொழிச்சிதைப்பு, பண்பாட்டுச் சீரழிப்பு மற்றும் பொருளாதார அழிப்பு போன்ற நடவடிக்கைகள், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் வளர்ச்சியடைந்து வருகின்றன. இவற்றை நிறுத்தாவிட்டால், தமிழ் மக்களுக்கு பேராபத்து கிட்டும்' என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயங்களடங்கிய கடிதமொன்றை, ஐ.நா செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினது தலைவர் வி.எஸ்.சிவகரன், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
'இரண்டாவது முறையாக இலங்கை வரும் தாங்கள், சுதந்திர வாழ்வுரிமைக்காகப் போராடும் இனத்தை அடக்கி ஒடுக்கி, முள்ளிவாய்க்காலின் முடிவில் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டபோது, தாங்கள் எடுத்த வலுவான முன்னகர்வு என்ன? 2009ஆம் ஆண்டில், விமானத்தில் வந்து வடக்கைச் சுற்றிப்பார்த்த நீங்க, கூட்டறிக்கை விட்டீர்கள். வழமை போல், இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. நீங்களும் அதை செயற்படுத்த அக்கறை செலுத்தவுமில்லை.
சமாதானம், சமத்துவம், நீதி, நியாயம் எனும் கோட்பாடுகளோடு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாக ஒலிக்கத் தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய ஐ.நா, பார்வையாளராகவும் வெறும் கண்டன அறிக்கைகளை விட்டு காலக்கெடுக்களை விடுவதையே, இந்த ஏழு ஆண்டுகளில் மேற்கொண்டது. எதிர்காலத்தில், மனித உரிமைகள் விவகாரம் காணாமல் போய்விடக்கூடிய நிலமை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றோம். உலகமும், நீதியின் பாலுள்ள நியதியை மாற்றி விட்டதா? எனும் ஆதங்கம், பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு எழுந்துள்ளது.
தமிழினத்தை நீங்களும் மனிதர்களாக கருதவில்லையா? ஒரு தேசிய இனம் சுதந்திர வாழ்வுரிமைக்காக போராடுவது உலக ஜனநாயக ஒழுங்கில் தவறா? எம்மை விட குறைந்த நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்ட கிழக்கு தீமோர், கொசோவா, தென்சூடான் போன்ற நாடுகளை தனிநாடாக்கியதும் அதை ஐ.நாவும்; ஆதரித்தது. நாம் ஒற்றைத்தேச ஒழுங்கில்; போராடாமைதான் தவறாகிவிட்டதா?
தாங்கள், பதவிக்காலத்தின் நிறைவில் இருக்கின்றீர்கள். பயனுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வலுச்சேருங்கள். வெறுமனே வெறும் சம்பிரதாய பூர்வமான பயணமாக மாற்றிவிடாதீர்கள். அதுதான் உங்கள் வாடிக்கை என்னும் விமர்சனமும் உண்டு.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படக்கூடிய வகையிலான சர்வதேச சுயாதீனமான விசாரணையே வேண்டும். அதுவே, தமிழ் மக்களுக்கு திருப்தியையும் ஏற்படுத்தும். மாறாக, உள்ளகப் பொறிமுறை என்பது, குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கும் கங்காரு நீதிமன்றம் போல் ஆகிவிடும்.
காணாமல் போனவர்களினதும், சிறைக்கைதிகளினதும்; மீள்குடியமர்விலும் பாதுகாப்புத்தரப்பால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதிலும் கூட, நல்லெண்ணம் காட்டாத நல்லாட்சி அரசு என்னும் பெயரை, தாங்களே தங்களுக்கு வைத்து உலகத்தையே ஏமாத்துகிறது இலங்கை அரசாங்கம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், காட்சி மாற்றம் நிகழவில்லை. இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வத் தீர்வையும் ஒருபோதும் வழங்காது என்பது, கடந்தகால அனுபவத்தின் நம்பிக்கை. மாறாக எம்மை அமைதியாக அழிக்கிறது.
தமிழ்த் தலைமைகள், மீண்டும் ஒரு தடவை ஏமாற்றப்படுவார்கள். எனவே, தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபை தான். ஆகவே, தார்மீக உரிமையுடன் நீங்களும் எம்மைக் காப்பாற்றாவிட்டால், கடவுளாலும் தமிழ் இனத்தைக் காப்பாற்ற முடியாது என்றே எண்ணுகின்றோம். எனவே, நீதியின்பால் நியதியை நீர்த்துப்போக வைக்கமாட்டீர்கள் என, முழுமையாக நம்பகின்றோம்' என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago