2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘ஜெகநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது’: ரிஷாட் அனுதாபம்

George   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்   

“தமிழ் -முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், எனக்கு அதிர்ச்சியையும் ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.   

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சமூக சேவையாளரான அவர், முல்லைத்தீவு மாவட்ட மக்கள், யுத்தத்தின் பாதிப்புக்களுக்கு உள்ளான போது, அந்த மக்களுக்கு அயராது பணியாற்றியவர். தனக்கு கிடைக்கப்பெற்ற இந்தப் பதவியை அவர் மிகவும் நேரிய முறையில், நடுநிலையாக மேற்கொண்டார்.   

தமிழ் -முஸ்லிம் உறவை என்றுமே விரும்பிய அவர், முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்தார். 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் அந்தப் பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு, நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.   

கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகங்களில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்து, அவர் சபையை வழிநடத்திய விதமும், அவரது ஆழமான கருத்துக்களும் இன்றும் என் மனதிலிருந்து நீங்கவில்லை.   

‘முஸ்லிம்களை முல்லைத்தீவில் குடியேற்ற ஒத்துழைப்பைத் தாருங்கள். அவர்களுக்கு உதவுங்கள்’ என அந்த மக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கூட்டத்தில் குரலெழுப்பிய போது, அந்தக் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, அவர்களுக்காகப் பரிந்து பேசியதை நான் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.   

இவ்வளவு சொற்ப நாட்களில் அவர் அகால மரணமாகி விட்டமை எனக்குத் தாங்க முடியாத வேதனையைத் தருகின்றது. வாழ்க்கையில் அவர் பல்வேறு வலிகளைச் சுமந்து வாழ்ந்த போதும், மக்கள் பணிக்கு முன்னுரிமை வழங்கியவர்.

அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு, நான் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்” என ரிஷாட் பதியுதீனின் அனுதாபச் செய்தியில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .