2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'தாரைவார்ப்பதா நல்லிணக்கம்?'

George   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'முல்லைத்தீவு, வட்டுவாகலில் பொது மக்களுடைய காணிகளை, கடற்படைக்கு வழங்க நிலஅளவை செய்யும் செயற்பாடு நல்லிணக்கம் அல்ல' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  

'முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில்  மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, மீண்டும் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளமையானது, தமிழ் மக்களினதும் உரிமைகளை வலிந்து பறிக்கும் செயற்பாடாகும்.

வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் தேவைகளுக்காக கடந்த 03 ஆம் திகதி காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து, தமது காணிகளை விடுவிக்கக் கோரியிருந்த போதிலும், மீளவும் எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதியன்று, காணி அளவீடு இடம்பெறவுள்ளது.

தேசிய பாதுகாப்பை காரணங்காட்டி, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் அபகரிக்கப்படுகின்றன. வட்டுவாகல் பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் முயற்சியில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது மக்கள் பல்வேறுபட்ட துன்பங்களின் மத்தியில் வாழ்ந்துவரும் இவ்வேளையில், படையினரின் தேவைகளுக்காக எமது மக்களின் காணிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றமையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எமது மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாதவாறும் இயல்பு வாழ்க்கை வாழ முடியாதவாறும் இராணுவம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. எனவே, எமது மக்களின் காணிகள் மீளவும் அளவிட்டு சுவீகரிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும்

எமது மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயத்தையும் மீன்பிடியையும் நம்பி வாழ்பவர்கள் இவர்களினுடைய காணிகளை பறிப்பதனூடாக ஏற்கெனவே யுத்தத்தில் பேரிழப்பை சந்தித்து நலிவடைந்துள்ள எமது மக்களின் வாழ்வாதாரம் மீளவும் பாதிக்கப்படும். எமது மக்களின் காணிகளை இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் வழங்க நாம் இடங்கொடுக்கமாட்டோம்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .