2025 ஜூலை 02, புதன்கிழமை

'மயிலிட்டி இயற்கை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலும் ஆயுதக்கிடங்கு என்கின்றனர்'

George   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மயிலிட்டி இயற்கை துறைமுகத்தை பயன்படுத்த விடாமல் வைத்துள்ளதுடன் அப்பகுதியில் ஆயுதக்கிடங்கு உள்ளது என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே வியாழக்கிழமை அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், 

வட பகுதியில் உள்ள இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். இராணுவத்தை முற்றுமுழுதாக அகற்றவேண்டும் என்பதையே நான் தொடக்கத்தில் இருந்து கூறிவருகின்றேன். 

ஒரு காலத்தில் இலங்கையின் மீன் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மயிலிட்டியில் இருந்து வழங்கிவந்தோம். ஆனால் தற்போது அதனை முழுமையாக மூடியுள்ளார்கள். இதனை திறக்குமாறு சொன்னபோது பல காரணங்களை கூறிவந்து கடைசியாக ஆயுதக்கிடங்கு அங்கு உள்ளதாக காரணம் சொல்லப்பட்டுள்ளது.

எனவே, அதனை மயிலிட்டியில் இருந்து மாற்றுமாறு இராணுவ அதிகாரி மகேஸ் சேனநாயக்கவுக்கு நான் கூறியிருந்தேன். அதற்கு சில காலம் எடுக்கும் என ஒரு மாத்திற்கு முன்னர் சொல்லியிருக்கின்றார். 

ஆகவே, கொஸ்கம போன்று இங்கு நடந்து விட்டால் எங்களுடைய இடங்கள் எல்லாம் பாழாய்போய்விடும்.  எனவே நடந்தது வருந்தத்தக்கது என்றாலும் எங்களுக்கு எல்லதொரு படிப்பினை. மக்கள் இருக்கும் இடங்களில் இவ்வாறான இடங்களை வைப்பதனால் வரும் பாதிப்பை இதில் இருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. 

என்னவாக இருந்தாலும் ஆயதக்கிடங்கை மயிலிட்டியில் வைத்துக்கொண்டு எங்களுக்கு உரிய இயற்கையான துறைமுகத்தை செயற்படாமல் வைப்பது அநியாயமான ஒன்று. ஆகவே, இதற்கு நாம் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம். 

இதேவேளை, தாண்டிக்குளம் பொருளாதார மத்திய நிலையத்துக்கும் நாங்கள் புதிய இடத்தை தெரிவு செய்துள்ளோம். அதனை அரசாங்கத்துக்கும் சொல்லியுள்ளோம். அது அவர்களின் கவனிப்புக்கு உள்ளாகியுள்ளது. அனேகமாக இந்த வாரத்தில் எங்களுக்கு தெரியவரும். 

அத்துடன் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சருடைய அமைச்சு தொடர்பான விடயங்களை ஆராய்ந்தோம். இந்த வருடத்துக்கு செய்ய வேண்டிய வேலைகள் உள்ளது. கடந்த வருடமும் நாம் செய்யவில்லை செய்யவில்லை என கூறிவருகின்றனர். எனினும், கடந்த வருடம் 95 சதவீதத்துக்கு மேல் நிதியை செலவிட்டுள்ளோம். 

அதனடிப்படையில் இந்த வருடம் முன்கூட்டியே வேலைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கான மீளாய்வை தற்போது செய்துள்ளோம். அதில் எமக்கு திருப்திகரமாக இல்லை. எனினும், அதற்கான உரிய நடவடிக்கைகளை செய்யவேண்டும் என கலந்துரையாடியுள்ளோம். மழைகாலம் வருவதற்கு முன்னர் பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது. கட்டாயமாக இம் முறை நிதி செலவழிக்கப்படும். கடந்த வருடமும் 95 சதவீதத்துக்கு  மேல் செலவு செய்து விட்டோம். ஆகவே, இம் முறை நூற்றுக்கு நூறு வீதம் செய்யவேண்டும் என்பதே எமது இலக்கு. இதற்காக கொழும்புடன் சம்பந்தப்படுத்தி பணத்தை முன்கூட்டியே தருமாறு கோரிக்கை விடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இனி குறிப்பிட்ட வேலைகளை செய்து முடித்தால் சரியாக இருக்கும்.

எனினும், போதுமான நிதியை மத்திய அரசிடம் கேட்டும் கிடைப்பதில்லை. ஆனாலும் கிடைப்பதை வைத்து செய்யக்கூடியதை செய்கின்றோம். பல திட்டங்களுக்கு கீழ் பல நிதி சிறிதுசிறிதாக வருகின்றது. அதனை பயன்படுத்துகின்றோம். 

10 மில்லியன் ரூபாய் கூட இரண்டு கிழமைக்கு முன்னர்தான் வந்துள்ளது. அவ்வாறு சில நிதிகள் வந்துகொண்டுள்ளன. எனினும், நாம் வேலைகளை செய்துமுடிப்போம் என தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் 'அடுத்த வடக்கு முதலமைச்சராக நீதித்துறையை சேர்ந்த ஒருவரை நியமிக்க சிலர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்' எனகேட்டார்.

'இதுவரை எனக்கு எவரும் இது தொடர்பாக செல்லவில்லை. என்னிடமே கேட்டுவருகின்றனர். கடவுளே பார்த்துக்கொள்வார் என கூறியிருக்கின்றேன்' என சி.வி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .