2025 ஜூலை 23, புதன்கிழமை

03 முஸ்லிம் கிராமங்களிலும் 15 தமிழ்க் கிராமங்களிலும் இந்திய வீட்டுத்திட்டம்:அப்துல் பாரி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 30 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில்  03 முஸ்லிம் கிராமங்களில் 100 வீடுகளும்  15 தமிழ்க் கிராமங்களில்  1,114 வீடுகளும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டதாக வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.அப்துல் பாரி தெரிவித்தார்.

புளித்தறித்த புளியங்குளம், ஹிஜ்ராபுரம், அரபாநகர் ஆகிய முஸ்லிம் கிராமங்களிலும் தரணிக்குளம், தாளிக்குளம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், பூம்புகார், மறவன்குளம், சிவபுரம், செல்வாநகர்,  புதிய வேலன், சின்னக்குளம், மகிலங்குளம், ரம்பைக்குளம், விளக்குவைத்தகுளம், பாக்குச்சொறிஞ்சான், பன்றிக்கெய்தகுளம் (பெரியமடு) ஆகியவற்றிலும் இந்திய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறி  பாதிக்கப்பட்ட மக்கள் வவுனியாவில் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணையில் இயங்கும் பிரஜைகள் குழு  அமைப்பு மேற்கொண்டது.

இவ்விடயம் தொடர்பில் எந்தச் சமூகத்திற்கும் பாராபட்சமான முறையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை வவுனியாவுக்கு வருகை தந்து நிலைமையை நேரடியாக அவதானித்த அன்றைய உயர் ஸ்தானிகர் அசேக்.கே.காந்தா உறுதிப்படுத்தினார்.

அதேபோல் பாதிப்புக்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் கிராம அதிகாரிகளின் உறுதிப்படுத்தல் என்பவற்றுடன் மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியுடன் பயனாளிகள் இறுதிப்பட்டியல் தெரிவு இடம்பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டு தற்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டு  இந்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது, அம்மக்களுக்கு வீடு வழங்கியதை ஆட்சேபித்து அமைச்சரையும் அரச அதிகாரிகளையும் இழிவாக சித்தரிக்கும் பதாகைகளை ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் சில சமாதான சீர்குலைவாளர்கள் சென்றதை காண முடிந்தது. இவர்கள் வவுனியாவில் நிரந்தர வீடுகளில் வசித்து வருபவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.

இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி பிரஜைகள் குழுவின் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்திருந்ததன் மூலம் இது அரசியல் இலாபம் தேடும் ஒரு ஆர்ப்பாட்டம் என்பது உறுதியானது.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களில் பாதிப்புக்குள்ளான கிராமங்களின் விபரங்களை அந்ததந்த கிராம அதிகாரிகள் மூலம் பிரதேச செயலகம் பெற்றும் அதனை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி அங்குள்ள அதிகாரிகளினால் ஆராய்ந்து களத்துக்கு சென்று இந்த கிராமங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் இன ரீதியான பிளவுகள ஏற்படுத்த அப்பாவி மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தமையானது கண்டனத்துக்குரியதாகும்.

குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்பதை அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் காணமுடிகின்றது. வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கோ எந்தவித அநியாயங்களே, தட்டிப்பறிப்புக்களோ அமைச்சரினால் இடம்பெறவில்லையென்பதை தெரிவித்துக்கொள்வதுடன், வீடற்று வேதனைப்படும் தமிழ் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ள வீடமைப்பு திட்டத்தை இல்லாமல் செய்யும் ஆர்ப்பாட்டமொன்றை செய்துள்ளமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால இயலாத்தன்மையின் மற்றுமொரு வெளிப்பாடாக காணமுடிகின்றது.

இந்திய அரசாங்கத்துடன் பேசி வீடற்ற வவுனியா மாவட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பதை செய்யாமல் கிடைத்தவற்றை இல்லாமல் செய்யும் பணியானது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாக கூறும்  இக்கூட்டமைப்பின் உயர் சேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .