2025 ஜூலை 30, புதன்கிழமை

உண்மையை மறைக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது: சண் மாஸ்டர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தம் நடைபெற்று முடிந்த காலத்திலிருந்தே இலங்கையின் நிலைமைகளை பார்வையிட எடுத்த அனைத்து முயற்சிகளும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன' என மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

'உண்மை நிலையை மூடி மறைக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தம் நடைபெற்று முடிந்த காலத்திலிருந்தே இலங்கையின் நிலைமைகளை பார்வையிட எடுத்த அனைத்து முயற்சிகளும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன.

நான்கு வருடங்கள் கடந்த பின்னர் இம்மாதம் இறுதியில் இலங்கைக்கான பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாக அறியமுடிகிறது.

இந்த நான்கு வருடங்களில்;, இறுதி யுத்தம் நடைபெற்றதற்கான அனைத்து தடயங்களும் அழிக்கப்பட்டு, இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதி இதுதானா? என்று ஆச்சரியம் எழும் அளவுக்கு அழகுபடுத்தல்களும் காட்சிப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன.

உண்மை நிலையை மூடி மறைக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தை தாங்கி நின்று இரத்தத்தில் தோய்ந்த மண் கூட இன்று சுற்றுலாத்தளங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இன்று இந்த இடங்கள் சுற்றுலாப்பயணிகளின் உல்லாசப்புரியாக திகழ்கின்றன.

இந்த இடங்களில் மிகவும் மோசமான மனிதப்பேரவலம் நிகழ்த்தப்பட்ட போரின் வடுக்களை நவநீதம்பிள்ளை எப்படி காணமுடியும்? அதற்கான காலமும் கடந்து விட்டது.

எஞ்சியுள்ள மக்களே தம்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கும், மனித உரிமை மீறல்களும் சாட்சியங்களாக உள்ளனர்.
எனவே போருக்கு முகம் கொடுத்த மக்களின் அனுபவப்பகிர்வுகளையும், கண்கண்ட சாட்சியங்களையுமே அவர் இங்கிருந்து திரும்பும் போது கொண்டுசெல்ல வேண்டுமானால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவசியம் பேச வேண்டும்.  

நவநீதம்பிள்ளையின் பயணம் ஏ9 பாதைக்குள் மட்டும் முடக்கப்படாமல் அதாவது ஏ9 பாதையின் இருமருங்கும் காட்சிப்படுத்தல் செய்யப்பட்டிருக்கும் அபிவிருத்தி மாயைகளை காட்டி அவரை திசை திருப்பி விடாமல், கிராமங்கள் தோறும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாட, சுயாதீனமாக நிலைமைகளை அவதானிக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான வருகை இழுத்தடிக்கப்பட்டு, எப்படி நீடிக்கச்செய்யப்பட்டதோ அதே போன்று தான் இலங்கையிலுள்ள சிறுபான்மையின சமுகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான நியாயங்களை வழங்கும் பொறிமுறைகளும் நீண்டு கொண்டே செல்லப்போகின்றன.

நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான வருகை காலம் கடந்து இடம்பெறுகின்றது.

ஆனாலும் இனியாவது அவர் உண்மைநிலைகளை கண்டறிய வேண்டுமானால் அவரை கட்டுப்படுத்தும், அவருடைய பயண ஒழுங்குகளை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாமல் விலகியிருக்க வேண்டும்.

நவநீதம்பிள்ளையின் வருகையின் போது அரசு எப்படி நடந்துகொள்ளப்போகிறதோ அதை வைத்துதான் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேசம் அளவீடு செய்யும் என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 

அவரை சந்தித்து உண்மை நிலைகளை எடுத்துக்கூறும் மக்கள் பிரதிநிதிகளை மிரட்டுதல், அச்சுறுத்தல், கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு தவிர்த்தால் மட்டுமே, நவநீதம்பிள்ளையின் பயணத்தின் நோக்கம் நிறைவடையும்.
அதற்கான சூழல் வடகிழக்கு பகுதிகளில் இருப்பதாக தெரியவில்லை' என மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .