2025 ஜூலை 30, புதன்கிழமை

அழிந்து செல்லும் நிலையில் வெடிவைத்தகல் தமிழ் கிராமம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெடிவைத்தகல் கிராமம் அழவடைந்து செல்லும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் குடியேறாமை மற்றும் அக்கிராமத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த மக்கள் மீள அங்கு செல்ல விரும்பாமையினால் இக்கிராமம் அழிவடைந்து செல்லும் நிலையை எட்டியுள்ளது.

1985 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 45 குடும்பங்கள் வாழ்ந்த இக் கிராமம் செல்வச்செழிப்புடன் காணப்பட்ட நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமான இடப்பெயர்வுகளினால் மக்கள் சிறுகச் சிறுக வெளியேறி நகர்ப்புறங்களை நோக்கி சென்றுவிட்டதாக அயல் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பராக்கிரமபுர கிராமத்தில் இருந்து 14 கிலோ மீற்றர் தூரத்திலும் ஓமந்தை கிராமத்தில் இருந்து 24 கிலேர் மீற்றர் தூரத்திலும் உள்ள இக் கிராமத்தில் தற்போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையினால் அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் மீளக்குடியேற விருப்பம் அற்ற நிலையில் காணப்படுகின்றனர்.

அங்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள பாடசாலை கவனிப்பாரற்று காணப்படுவதுடன் வீடுகளும்; சிதைவடைந்தும் காணப்படுகின்றன.

அக்கிராமத்தை சூழவும் காடுகள் வளர்ந்து காணப்படுவதனால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மின்சார வசதிகள் மற்றும் வீதி செப்பனிடப்படாமை போன்ற காரணங்களால் அக் கிராமத்தில்மக்கள் மீள்குடியேற விருப்பமின்றி உள்ளதாகவும் சிலர் தமது வயல் நிலங்களில் நெற்செய்கை காலங்களில் மாத்திரம் விவசாயம் செய்து விட்டு செல்வதாகவும் அயல் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வெடிவைத்தகல் கிராமத்திற்கு மக்கள் குடியேறாமையினால் அருகில் அமைந்துள்ள கோவில்புளியங்குளம் கிராமத்திற்கும் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கும் அக்கிராமத்தவாகள் தங்களது கிராமத்திலும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் 35 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்பொது 9 குடும்பங்கள் மாத்திரமே வசிக்கும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலை தொடர்ந்தும் ஏற்படுமாயின் கோவில்புளியங்குளம் கிராமமும் அழிவடைந்து செல்லும் எனவும் அவர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எனவே அதிகாரிகள் இது தொடர்பில் கவனமெடுத்து வெடிவைத்தகல் கிராமத்தை அழிவில் இருந்து மீட்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .