2025 ஜூலை 30, புதன்கிழமை

தற்போதைய அரசும் தமிழர்களின் சுதந்திர இருப்பை இல்லாதொழிக்க மூர்க்கமாக செயற்படுகின்றது: ப.சத்தியலிங்கம

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'எப்போதும்போல தற்போதைய அரசும் இன்றும் இந்த நாட்டில் தமிழரின் சுதந்திர இருப்பையும் தமிழ் இன அடையாளத்தையும் இல்லாது ஒழிக்க பல்வேறு வழிகளிலும் மூர்க்கமாக செயற்பட்டு வருகின்றது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் வவுனியா குருமண்காட்டில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் இனப்பரம்பலை மாற்றி எமது அடையாளத்தை முற்றிலுமாக இல்லாது ஒழிக்க திட்டமிட்ட குடியேற்றங்களையும், அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் எமது வளங்களைச் சுரண்டியும் எமது இருப்பை கேள்விக்குரியதாக்கும் கைங்கரியத்தில் அரசு ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன் எமது சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் விழுமியங்களை இல்லாது ஒழிக்க எமது இளம் சந்ததியினரை திட்டமிட்டு தவறான வழிகளில் ஈடுபடுத்தி வருகின்றது.

ஏற்கனவே காத்திரமான அதிகாரமேதுமற்றிருந்த மாகாண சபை முறைமையானது இன்று மேலும் நீர்த்துப்போக வைக்கப்பட்ட நிலையில் எமது இனத்திற்கு நிரந்தரமான அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. அத்துடன் விலைமதிப்பற்ற எம்மவர்களின் தியாகங்களுக்கு ஒருபோதும் ஈடாகப்போவதுமில்லை.

ஆனாலும் நடைபெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலானது எமது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகின்றது. ஏனெனில் அரசாங்கமானது அபிவிருத்தி என்ற மாயைக்குள் எமது மக்களைச் சிக்கவைத்து சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் அரசுடன் இருப்பதாகவும் நாம் உரிமையை அல்ல அபிவிருத்தியையே கேட்கின்றோம் என்று காட்ட முனைகின்றது.

இதன்மூலம் தமிழர்களுக்கு இந்நாட்டில் அரசியல் பிரச்சனை ஏதும் இல்லையென்றும் வெறுமனே பயங்கரவாத பிரச்சனையே இருந்ததாகவும் காட்டிக்கொள்ளமுனையும் அரசாங்கத்தை தோற்கடிக்கும் சந்தர்ப்பமாகவே இத்தேர்தலை நாம் நோக்க வேண்டும்.

எனவே நாம் அனைவரும் இத்தேர்தலை தமிழர்களுக்கு நிரந்தரமானதும் எம்மை நாமே ஆளக்கூடியதும் எமது எதிர்கால இருப்பிற்கான நிரந்தர உத்தரவாதத்தை வெளிக்கொண்டுவருவதற்காக வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைகளை அங்கீகரித்ததன் அடிப்படையில் உருவாகும் அரசியல் தீர்வே தேவை என்பதை இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும்; உணர்த்துவதுடன் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் ஓர் கருத்துக்கணிப்பாகவும், சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையையும் அரசியல் தீர்வில் நாம்கொண்டுள்ள பற்றுருதியையும் காட்டும் ஒரு களமாகவும் பயன்படுத்தல் வேண்டும்.

எனவே வாக்காளர்கள் தேர்தலன்று வீட்டில் தயங்கி இருக்காமல் அனைவரும் தவறாது தேர்தலில் வாக்களிப்பதுடன் எமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அளித்து எமது வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யவேண்டும்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .