2025 ஜூலை 30, புதன்கிழமை

நவனீதம் பிள்ளை விஜயம்: யுத்தத்தினால் சேதமான வாகனங்கள் மறைப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

"யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட பொதுமக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காண முடியாத வகையில் மறைப்புச் செய்யப்பட்டு வருவதாக" தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம்பெயர்ந்து சென்றனர். யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் அந்த மண்ணில் குடியேற்றம் செய்யப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்வுகளின் போது கைவிட்டுச் சென்ற வாகனங்கள் பயண்படுத்த முடியாத  வகையில் காணப்பட்டுள்ளன. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாமையினால் அவை திருப்பி வழங்கப்படாத நிலையில் படைத் தரப்பினரினால் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சுதந்திர புரம் சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சந்தி ஆகியவற்றில்  பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தொகுதி வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை முள்ளிவாய்க்காளில் சுமார் 250 மீற்றர் பரப்பளவில் பயன்படுத்த முடியாத வகையில் கடும் சேதங்களுக்கு உள்ளான வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் அவற்றை அவரோ அல்லது அவரின் குழுவினரோ பார்க்கக்கூடாது என்பதற்காக குறித்த மூன்று இடங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களைச் சுற்றி சுமார் 15 அடி உயரம் வரை தகரத்தினால் மறைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் அந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மக்களிடம் சுதந்திரமான முறையில் அவர்களின் பிரச்சினையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .