2025 ஜூலை 30, புதன்கிழமை

தேர்தல் வன்முறை; கபேயிடம் முறைப்பாடு

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண சபை தேர்தலில் அரச வாகனங்கள் உட்பட பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதாக கபே என்று அழைக்கப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான இயக்கத்திடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக இடம்பெறும் தேர்தல் கால முறைகேடுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இவற்றைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவை பற்றி எனக்கும் அறியத்தருமாறும் அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.
  1. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அலுவலக வாகனங்கள், ஆளும் கட்சி சார்பாக போட்டியிடுவோரின் பிரசார நடவடிக்கைக்கு ஈடுபடுத்துவதுடன் அமைச்சின் உத்தியோகத்தர்களும் அவ்வாறே செயற்பட பணிக்கப்பட்டுள்ளனர்.
  2. வவுனியா மாவட்ட  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 21.08.2013ஆம் திகதி  அமைச்சர் றிசாத் பதியுதீனினால் கச்சேரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, அவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு தலைவரைத் தெரிந்து அத் தலைவர் ஒவ்வொருவரிடமும் ஒரு படிவத்தைக்கொடுத்து அவர்கள் சேவையாற்றும் பகுதிகளில் அரசாங்கத்துக்கு  ஆதரவாக இயங்கும் குடும்பங்களின் குடும்ப அட்டைகள் இலக்கம், அவர்களுக்குரிய வாக்காளர் இடாப்பு இலக்கங்கள் என்பனவற்றை பதிவு செய்து தருமாறும், அவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவான குடும்பங்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும் என்று கூறியதுடன், சமுத்தி உத்தியோகத்தர்களுக்கு தற்போது உள்ள அரசாங்கமே உத்தியோகம் தந்ததால் அவர்கள் எல்லோரும் கட்டாயமாக  அரசாங்கத்திற்கு மாகாண சபை தேர்தலில் ஆதரவு தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்துள்ளார்.
  3. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மரக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவு  கிராம அலுவலர் அரியரடணத்தினால் தனது அலுவலகத்திற்கு சேவை பெற வரும் பொதுமக்களை ஆளும் கட்சி வேட்பாளர் ப. உதயராசாவிற்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர்.
  4. முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளரான ஜெயராஜ் (கிருபன்) என்பவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் 'வீடு' சின்னத்தில் போட்டியிடும் து. ரவிகரன், சி.சிவமோகன், கனகசுந்தரசுவாமி, புவனேஸ்வரன் ஆகிய  நான்கு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என வாக்காளர்களை நேரடியாகக் கோரும் பிரசுரங்களை விநியோகித்து வருவதால், சம்பந்தப்பட்டோர் தமது தேர்தல் ஜனநாயகக் கடமைகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு பெரும் இடையூறாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .