2025 ஜூலை 30, புதன்கிழமை

'ஒரு கட்சியை மட்டும் நவீ பிள்ளை சந்திப்பது தேர்தல் துஷ்பிரயோகம்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'தென்பகுதியிலே அரச சொத்துக்கள் கூடுதலாக தேர்தலுக்குப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறியக்கூடிதாக உள்ளது. இது ஒருவகையான தேர்தல் துஷ்பிரயோகம் என்றால் வடபகுதிக்கு வருகை தரும்  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு கட்சியை மாத்திரம் சந்திக்கவிருப்பது தென்பகுதியில் இடம்பெறும் அரச தேர்தல் துஷ்பிரயோகங்களை சமப்படுத்தி விடும்' என  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்  தெரிவித்தார்.

கபே நிறுவனமும் இலங்கை மனித உரிமைகளுக்கான ஆய்வு நிலையமும் ஏற்பாடு செய்திருந்த போருக்குப் பின்னரான அபிவிருத்தியும், அபிவிருத்தியில் சிவில் சமூகத்தின் பங்களிப்பும் என்ற தொனிப்பொருளிலான மக்கள் சந்திப்பு இன்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'முல்லைத்தீவுப் பகுதியில் பல காலங்களாக சிவில் சமூக நிறுவனங்களோடு இணைந்தே கபே அமைப்பு இயங்கி வருகின்றது.

2010 இல் இருந்த நிலைமைக்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் மாற்றங்கள் உள்ளன. அப்போது இந்தப்பகுதியில் தேநீர் குடிக்க ஒரு கடைகூட இருந்திருக்கவில்லை.

இப்போது போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என்று அபிவிருத்தி காலடிக்கு வந்துள்ளதைக் கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.

இவைகள் நடக்கும்போது இயல்பாகவே சிவில் சமூகத்தின் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

கிளிநொச்சியில் முதன் முறையாக சிவில் நிறுவனங்களின் மன்றம் ஒன்றை அமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. சிவில் சமூகம் எப்போதுமே வெளிநாட்டுப் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கமுடியாது.

அதேபோன்று வெளிநாட்டிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் இந்தப் பகுதிக்கு வருபவர்கள் எந்த விதமான அபிவிருத்தி மாற்றத்தையும் கொண்டு வந்து தருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவும் முடியாது.  அபிவிருத்தி என்பது உள்ளூர் மக்களுக்குரியது.

அதனை உள்ளூர் மக்களும் இந்தப் பகுதியை நிர்வகிக்கும் அரச அதிகாரிகள், இராணுவம், பொலிஸ், சமூக மட்டக் குழுக்கள்  பெண்கள் அமைப்புக்கள், சிவில் சமூகம் என்று எல்லோருமாக இணைந்துதான் இந்தப் பகுதி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும்.

வீட்டைக் கட்டி, வீதியைத் திருத்தி, மின்சாரத்தை வீட்டுக் கொண்டு வந்து வீட்டை வெளிச்சமேற்றித் தரும் வரையில் மக்கள் வெறுமனே பார்வையாளர்களாக மாத்திரம் இருந்து விடக்கூடாது. மக்கள் பார்வையாளர்களாக இல்லாமல் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாறவேண்டும்.

இப்போது சரித்தரத்தில் முதன் முறையாக வடபகுதி மக்களாகிய நீங்கள் தேர்தலை எதிர்கொள்கின்றீர்கள்.
அடையாள அட்டை இல்லாதது கூட இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயமாக இருந்தது. 85 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தேசிய ஆளடையாள அட்டைகள்  இல்லாதிருக்கின்றன.

சிவில் சமூகத்திற்கு உள்ள உரிமைகளின் படி அரசியல் சிந்தனைகள் இருக்கின்றன. சுதந்திரமாக வாக்களிப்பது உங்கள் உரிமை. தேர்தல் வன்முறைகள் இங்கு இடம்பெறவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.

ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள உரிமையைப் பாதுகாக்க சிவில் சமூக அமைப்புக்கள் பாடுபட வேண்டும்.
இதற்கான வசதிகளை கபே அமைப்பு ஏற்படுத்தித் தரும். யுத்தத்தால் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி  செய்ய சிவில் சமூகமும் இராணுவமும் பொலிஸாரும் பெண்களும் இணைந்து செயற்பட்டடால் வெற்றி நிச்சயம்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .