2025 ஜூலை 30, புதன்கிழமை

சோபாளபுளியங்குளம் தமிழ் மக்களை அரசியல் செல்வாக்கால் அகற்ற முயற்சி: சிவசக்தி ஆனந்தன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மன்னார் வீதி, சாளம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள சோபாளபுளியங்குளம் பகுதியில் குடியிருக்கும் தமிழ் மக்களை அங்கிருந்து அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முஸ்லிம்கள் அகற்ற முயற்சிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

சோபாளபுளியங்குளத்தில் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 130 வரையான தமிழ் குடும்பங்கள் குடியிருந்தனர்.

யுத்த சூழ்நிலை காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில் அவர்கள் தம் வாழ்ந்த பிரதேசங்களில் வீடுகளை அமைத்து வருகின்றனர்.

இதேபோன்று இப் பகுதியில் தொடர்ச்சியாக விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபட்ட 32 குடும்பங்களுக்கு வன இலாகாவின் அனுமதியுடன் இப் பகுதியில் உள்ள வன இலாகாவின் காணிகள் வழங்கப்பட்டிருந்தன.

இக் காணிகளில் குடியிருக்கும் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், வன இலகாவுக்கு சொந்தமான காணிகளில்  தமிழ் மக்களுக்கு ஒரு பகுதியும் முஸ்லிம் மக்களுக்கு
ஒரு பகுதியும் என நீதிமன்றத்தின் துணையுடன் பிரித்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ் மக்கள் தமது வீடுகளை அமைத்து வருகின்ற நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்பினரொருவரின் தலைமையில் அங்கு சென்ற முஸ்லிம் இளைஞர்கள் அடங்கிய குழுவினர் பெண்கள் வீடுகளில் தனிமையில் நின்ற நிலையில் அவர்களை அச்சுறுத்தி அவர்களது வீடுகளை அகற்றி தடி கம்புகளை கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் நாளாந்தம் கூலி வேலை செய்து சேர்த்த பணத்தில் கட்டிய வீட்டினையும் இழந்த நிலையில் அம்மக்கள் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையிலேயே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அம் மக்கள் என்னிடம் முறையிட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நானும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரனும் நேரடியாக சென்று அம் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொணடோம்'  என்றார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .