2025 ஜூலை 30, புதன்கிழமை

காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு அன்றையதினமே மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதிவரை  விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவரின் சடலம் யாழ். நயினாதீவு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

2 பிள்ளைகளின் தந்தையான ஸ்டார்லின் ஜெராட் (வயது 39) என்ற மீனவரே காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த ஜே.ஜெரிசா மடுத்தின் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்டார்லின் ஜெராட் (வயது 39)  ஆகிய இரண்டு மீனவர்களும் கடந்த மாதம் 22ஆம் திகதி  மீன் பிடிப்பதற்காக படகு ஒன்றில் ஆழ்கடலுக்குச் சென்றிருந்தனர்.  இந்த நிலையில்,  மறுநாளான கடந்த 23ஆம் திகதி இவர்கள் சென்ற படகு மாத்திரம் கரையொதுங்கியது.

இதன் பின்னர் இந்தப் படகில் சென்ற மீனவர்களில் ஒருவரான ஜே.ஜெரிசா மடுத்தின் என்பவர் இராமேஸ்வரம் கடற்பரப்பிற்கு உட்பட்ட 5ஆம் மண் திட்டியில் நடுக்கடலில்; கிடந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டு பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் இவருடன் சென்ற மற்றைய மீனவரான ஸ்டார்லின் ஜெராட் என்பவரின் நிலைமை  தெரியவரவில்லை. இதனைத் தொடர்ந்து  இந்த மீனவரின் மனைவி தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதன் பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது படகு கவிழ்ந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பில் தெரியவரும் எனவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .