2025 ஜூலை 30, புதன்கிழமை

'கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் சதி'

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெட்கத்திற்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும். பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் அதிகாரத்தை மட்டும் கோருகிற உப்புச்சப்பற்ற தேர்தல் விஞ்ஞாபனமாகும். ஒவ்வொரு கடமைகளையும், பணிகளையும் வேறு யாரிடமோ பொறுப்பு வைக்கும் சுயநலப்போக்குடையதாக காணப்படுகிறது' என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரத்தை மக்களிடம் கேட்கின்ற அளவுக்கு இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களின் துயரங்களுக்கு எவ்விதமான பொறுப்புக் கூறலையும் செய்யவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது சர்வதேசத்தில் மறைந்து வாழும் விடுதலைப் புலிகளை காட்டிக்கொடுக்கும் நோக்குடனும், புலிகளையும், தமிழ் மக்களையும் குற்றவாளிகள் என்று சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி, எஞ்சிய புலிப்போராளிகளை சிறையில் தள்ளுவதையும் நோக்கமாக கொண்டது.

தடுப்பில் இருந்து வந்து தமது குடும்பத்துடன் வறுமையில் வாடும் முன்னாள் போராளிகளையும் இலக்கு வைத்து தாக்குவதனை நோக்கமாக கொண்டுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதாக கூறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளையும், புலம்பெயர் தமிழ் மக்களையும் இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியுள்ளனர்.

சர்வதேச தமிழ் மக்களின் ஆதரவு தளம் தங்களுக்கு குறைவடைவதனை கண்டுகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒட்டுக்குழுக்கள் இவ்வாறு புதிய முறையில் இன அழிப்பை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன.

எனவே புலம்பெயர் தமிழ் மக்களும், தாயக தமிழ் உறவுகளும் இனிவரும் காலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்பினால் தந்தை செல்வாவினால் முடக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், அதன் வீட்டு சின்னத்தையும் முடக்குவதும், நிராகரிப்பதுமே சிறப்பான எதிர்காலத்திற்கான ஒரேயொரு வழியாகும்.

நேற்று வெளியான (03.09.2013) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், அரசியல் தீர்வு தொடர்பான தமது நிலைப்பாடு தொடர்பாக பந்தி 9இல் கூறப்பட்டுள்ளதை இங்கே முழுமையாகத் தருகிறேன்.

'யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்திற்கும், த.வி.பு களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மையும், பாதிக்ப்பட்டவர்களுக்கான நீதியும் நிலைநாட்டுவதோடு, இழப்பீடுகள் அடங்கலாக நிவாரணங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்' என்று உள்ளது.

 ஈழத்தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டிய சரியான தருணம் இதுவாகும். எனவே தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் இத்தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாபஸ் பெற்று, சம்மந்தனும், விக்கினேஸ்வரனும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கேட்டு இத்தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளாவிட்டால் நான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன்' என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • AJ Wednesday, 04 September 2013 07:04 AM

    எங்க இருந்து தான் இவர்கள் வருகிறார்கள். யார் சொல்லி வருகிறார்கள் என்று எல்லோரும் அறிவோம். குற்றம் யார் செய்தலும் அதை கண்டுபிடித்து தண்டனை கொடுக்கவேண்டும். அதை தான் இந்த விஞ்ஞாபனம் சொல்லி இருக்கிறது. இவர்களின் அழுகை தமிழ் கட்சிக்கு வாக்கு கிடைக்கமால் செய்வே இந்த அழுகை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .